சென்னை: "நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூக நீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டும். நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும்” என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, தவாக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ”நீட் தேர்வு தொடர்பாக கூட்டப்பட்டிருக்கக்கூடிய இந்த இரண்டாவது கூட்டத்திற்கு எங்களுடைய அழைப்பை ஏற்று வந்தமைக்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதையொட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம். நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழகம்.
2006-ல் இதற்காக டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து, அந்தக் கமிட்டியின் மூலமாக ஒரு அறிக்கையைப் பெற்று, நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை நம்முடைய சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம். அதுகுறித்து சற்று விவரமாக நாம் கூற வேண்டும் என்றால், டாக்டர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் 7.7.2006 அன்று ஒரு கமிட்டி அமைத்தோம். 13.11.2006 அன்று அறிக்கை பெற்றோம். 6.12.2006 அன்று சட்டமன்றத்தில் அதற்கான சட்டமுன்வடிவை நிறைவேற்றினோம். அந்தச் சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, 3.3.2007 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அதாவது 86 நாட்களில் ஆளுநரும், குடியரசுத் தலைவருமே ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இப்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் முன்பு, மத்திய அரசில் உள்ள மனிதவள மேம்பாட்டுத் துறையின்கீழ் இருக்கும் உயர் கல்வித் துறை 15.2.2007 அன்று தமிழகத்தின் சட்டத்தை ஏற்கலாம் என்று ஒப்புதல் வழங்கியது. அந்த ஒப்புதலில் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான கருத்துகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டம் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவது உயர் கல்வியின் தரத்தை குறைக்காது. பிளஸ் டூ தேர்வுகள் மிகவும் நேர்மையானவை , வெளிப்படைத்தன்மை வாய்ந்தவை. ஒவ்வொரு மாநிலமும் வெளிப்படையான மற்றும் நேர்மையான மாணவர் சேர்க்கை நடைமுறையை வகுத்துக் கொள்ள ஆட்சேபனை இல்லை. இதைக் கூறியது தமிழக அரசு அல்ல; மத்திய அரசின் உயர்கல்வித் துறை. அது மட்டுமல்ல, தமிழக அரசின் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் சட்டமுன்வடிவு மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போனது. இந்தத் துறையின்கீழ்தான் இப்போது சொல்லப்படுகின்ற நீட் தேர்வு வருகிறது. அந்த மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை, நுழைவுத் தேர்வினை ஒழிக்கும் அன்றைய தமிழக அரசின் சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தது.
மத்திய அரசின் உயர்கல்வித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சட்டத் துறை அனைத்தும் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்த பிறகுதான் குடியரசுத் தலைவர் 2006-ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். அந்தச் சட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனார்கள். சென்னை உயர்நீதிமன்றம் “சட்டம் செல்லும்” என்று தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “தமிழக அரசின் நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் ஒரு சமூக நலன் சார்ந்த சட்டம்; சமூகநீதியை அடைய இது தேவை” என்று சொல்லியிருக்கிறது. அதை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்- “It is a Social Welfare Legislation to meet social Justice” என்று அந்த அமர்வில் இருந்த நீதியரசர்கள் மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் தீர்ப்பளித்ததை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அப்படிப்பட்ட பிரத்யேகமான நிலை, மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கையில் தமிழகத்தில் சுமார் 10 ஆண்டுகள் நீடித்தது. அதாவது, பிளஸ் டூ மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மருத்துவக் கல்வியிலும், பொறியியல் கல்வியிலும் சேர்த்துக் கொண்டிருந்தோம். இந்தச் சூழலில்தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தோம். அந்தக் கமிட்டியின் அறிக்கையைப் பெற்று சட்டமன்றத்தில் விவாதித்திருக்கிறோம். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று மசோதாவை நிறைவேற்றினோம். இந்தச் சட்டமுன்வடிவினை உடனடியாக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த அரசியல் சட்ட கடமையைச் செய்யவில்லை. அதனால் நானே 27.11.2021 அன்று நேரில் சென்று ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். பிறகு எனது அமைச்சரவையிலே இடம்பெற்றிருக்கக்கூடிய மூத்த அமைச்சர் துரைமுருகன் 17.12.2021 அன்று ஆளுநரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, 28.12.2021 அன்று அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் சென்று மனு அளித்து வலியுறுத்தியிருக்கிறோம். மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இயலாத சூழலில் - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை அவசரமாக முதல்வர் என்ற முறையில் கூட்டினேன். அதாவது, 8.1.2022 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நீங்கள் எல்லாம் வருகை தந்து ஆலோசனைகளை எல்லாம் வழங்கினீர்கள். “நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம்” என்று தீர்மானம் நிறைவேற்றினோம். ஜனவரி 12-ஆம் தேதி தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை கானொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். அப்போதுகூட காணொலி வாயிலாகவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். 17.1.2022 அன்று நம்முடைய நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நம்முடைய தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது.
ஆனால், 2007-இல் 87 நாட்களுக்குள் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தார். ஆனால், 13.9.2021-இல் நாம் நீட் தேர்வு தேவையில்லை, மாணவர்களைக் கொல்லும் இத்தேர்விலிருந்து விலக்கு அளியுங்கள் என்று நிறைவேற்றிய சட்டமுன்வடிவை நம்முடைய ஆளுநரே 142 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்திருந்து, இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுற்று மாணவர் சேர்க்கை தொடங்கிய பிறகே, சட்டமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று 1.2.2022 அன்று அதைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
அதற்கான செய்திக் குறிப்பில், நீட் தேர்வு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக மேற்கோள் காட்டுகிறார். ஆனால் நீட் விலக்கு சட்டமுன்வடிவு நமது சட்டமன்றத்தினுடைய 8 கோடி மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் தமிழக சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் தொடர்புடையது. தமிழக சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது. அந்தத் தீர்ப்பு வேறு, தமிழக சட்டமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வேறு. அதனால்தான் இந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கோருகிறோம். குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் முன்பே, ஆளுநர் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியிருக்கிறார். அதனால்தான் இந்த அசாதரண சூழல் குறித்து விவாதித்து , நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த சமூகநீதிப் போராட்டத்தை நடத்திட வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் உங்களை எல்லாம் அழைத்திருக்கிறோம். அடுத்தகட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை நீங்கள் அனைவரும் வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் இங்கே ஒரு வரைவுத் தீர்மானத்தைப் படிக்கவிருக்கிறார். அதன்மீது தாங்கள் அனைவரும் கருத்துகளை எடுத்துரைத்து, நீட் தேர்வுக்கு விலக்குப் பெறும் தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு நீங்கள் அத்தனை பேரும் தொடர்ந்து துணை நிற்க வேண்டும் என்று கேட்டு என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று முதல்வர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago