நீட் விலக்கு மசோதா | முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - அதிமுக, பாஜக புறக்கணிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் விலக்கு மசோதாவை அரசுக்கு ஆளுநர் திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

நீட் விலக்கு மசோதா: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி, தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு, நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, தவாக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்து விட்டன.

முன்னதாக, "2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் மாணவர்களின் நீட் தேர்வு தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் மசோதா குறித்த புரிதல் இல்லாத ஆளுங்கட்சி, பொய்களை பரப்பி, பாஜக மீதுதவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதற்கான ஆளுநரின் பதிலை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது. ஆளுநரின் கேள்விக்கு முழு பதிலை தமிழக அரசு அளித்த பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தினால், முதல் கட்சியாக பாஜக பங்கேற்கும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தை அதிமுகவும் புறக்கணித்துள்ளது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு, திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தது கவனிக்கத்தக்கது.

பின்புலம்: தமிழகத்தில் 2017-ம் ஆண்டுமுதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வகையில், அவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்து, கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்பேரவை முதல்கூட்டத்திலேயே மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, திமுக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான மசோதா கடந்த ஆண்டு செப்.13-ம் தேதிசட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போதிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து, நீட் தேர்வு குறித்த மனுவை அளித்தது. அதற்குப் பிறகும், நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், பிப்.1-ம் தேதி,நீட் மசோதாவை தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். நீட் மசோதா, கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும், மேலும் பல்வேறு காரணங்களையும் குறிப்பிட்டு, அந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தெரிவித்திருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆளுநர் டெல்லி பயணம்? - இந்த சூழலில், ஆளுநர்ஆர்.என்.ரவி, வரும் 7-ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாகவும், 3 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்