நீட் விவகாரம் | 'ஒரு தந்தையாக வேதனைப்படுகிறேன்' - ஆளுநருக்கு எதிராக போராடிய விழுப்புரம் முன்னாள் திமுக எம்எல்ஏ

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து, விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அதைக் கைவிட்ட முன்னாள் திமுக எம்எல்ஏ, "ஒரு தந்தையாக நான் படுகின்ற வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது" என்றார்.

நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலையின் கீழே திமுகவின் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ் தலைமையில் பொதுமக்கள் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், "தமிழக ஆளுநரை திரும்பப் பெறவேண்டும். தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை மதிக்கவில்லை என்பதால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். என் மகன் மனோஜ்குமார் ப்ளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தபோது நீட் தேர்வு அமலுக்கு வந்தது. அதன் பின் நடைபெற்ற நீட் தேர்வில் என் மகன் வெற்றிபெற முடியாததால், நிகர்நிலை பல்கலைக்கழக்த்தில் சேர்ந்து ஆண்டுக்கு ரூ.25 லட்சம் பணம் செலுத்தி படித்து வருகிறார்.

ஒரு தந்தையாக பாக்கும்போது, நான் படுகின்ற வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. என்னாலே என் மகனை படிக்கவைக்க இயலவில்லை. என்னைப்போன்ற எண்ணற்ற ஏழைப் பெற்றோர்கள்களின் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், முதல்வர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கட்சியின் தலைமையின் முடிவுக்கு ஏற்ப உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டேன்" என்றார் புஷ்பராஜ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE