வேலூரில் திமுக எம்எல்ஏக்கள் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த அதிமுகவினர்

By செய்திப்பிரிவு

வேலூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய திமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு அளித்தனர்.

வேலூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன்மூலம் மறைந்த தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் நேற்று முன்தினம் அனுமதி பெற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதேநேரம், எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் திமுக எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர் மாலை அணிவித்தனர். அப்போது, அண்ணா சிலையின் இரும்பு கூண்டு பூட்டப்பட்டிருந்ததாகவும், அந்தப்பூட்டை திமுக எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் உடைத்து வீசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவின.

இந்நிலையில், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பாலசந்தர், மாவட்டப் பொருளாளர் எம். மூர்த்தி ஆகியோர் வேலூர் மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான அசோக்குமாரிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘‘தேர்தல் நடத்தை விதிகளை மீறி அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் எந்தவித அனுமதியும் இல்லாமல் பூட்டி இருந்த சிலையின் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்து தேர்தல் விதிகளை மீறி மாலை அணிவித்துள் ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவின் போதும், மனுக்கள் பரிசீலனையின் போதும் ஆளும் திமுகவினர் அதிமுக வேட்பாளர்களின் மனுவில் குளறுபடிகள் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திட வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE