சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பாஜக அரசை எதிர்த்து, தமிழகமே ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணை பலவீனமாக உள்ளது என்ற காரணத்தைக் கூறி, நீர் மட்ட அளவைக் குறைக்க தீவிர முயற்சிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. 1964 ஆம் ஆண்டு பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு 155 அடியிலிருந்து 152 அடியாக அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்ட அளவை 142 அடியாக உயர்த்த அனுமதி வழங்கியது. அணையை பலப்படுத்தும் பணி முடிந்ததும் 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், இந்த முயற்சிகளுக்கு தடையாக கேரள அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதனால், இப்பிரச்சினை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு, அணை பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையொட்டி, 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு நீர் மட்டத்தை 142 அடியாக உறுதி செய்து அனுமதி அளித்தது.
அதேநேரத்தில், கேரள அரசு இயற்றிய சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அணையை பலப்படுத்திய பிறகு, 152 அடி வரை நீரைத் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அணையைப் பலப்படுத்துவதற்கு கேரள அரசு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மேற்பார்வைக் குழுவும், மத்திய நீர்வள ஆணையமும் இணைந்து அறிக்கை சமர்ப்பித்திருப்பது தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தால் அணையின் உறுதித்தன்மை இறுதி செய்யப்பட்ட பிறகு 142 அடி நீர் தேக்கப்பட்டு வருகிறது. இதை சீர்குலைக்கின்ற வகையில் மத்திய நீர்வள ஆணையம் அணையின் உறுதித்தன்மை குறித்து மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது தமிழக நலன்களுக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதையே உறுதிப்படுத்துகிறது.
தமிழகத்திற்கு நீர்வளத்தை வழங்கி வருகிற காவிரி பிரச்சினையில் மேகதாதுவில் அணை கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க மத்திய பாஜக. அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்திலும், மத்திய பாஜக அரசிடமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல முல்லைப் பெரியாறு அணையில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் நடந்து கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இருமாநிலம் சம்மந்தப்பட்ட நதிநீர் பிரச்சினைகளில் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்படுவதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் குற்றஞ்சாட்ட விரும்புகிறேன்.
எனவே, முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மறுஆய்வு செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனு செய்திருப்பதற்கு எதிராக, தமிழக அரசு உரிய நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்கிறேன். முல்லைப் பெரியாறு அணையில் எந்த நீர்க்கசிவோ, சுண்ணாம்புத் துகள்கள் வெளியேற்றமோ இல்லாத நிலையில் கட்டுக்கோப்பாக இருக்கும் போது இந்த மறுஆய்வுக்கு அவசியமே இல்லை.
இத்தகைய முயற்சிகளில் மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் மத்திய நீர்வளத்துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இப்பிரச்சினையில், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டிருப்பதால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பதன் மூலம் தமிழகத்தின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
எந்த நிலையிலும், எந்தப் பிரச்சினையிலும் தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பாஜக அரசை எதிர்த்து, தமிழகமே ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago