அனைத்து பார்களையும் மூட உயர் நீதிமன்றம் தீர்ப்பு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து பார்களையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3,719 குடிப்பகங்களை உடனடியாக மூட வேண்டும்; மீதமுள்ள குடிப்பகங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மதுக்குடிப்பகங்களை நடத்துவதற்கான உரிமங்களைப் பெற்றவர்கள், கரோனா காலத்தில் மதுக்குடிப்பகங்களை நடத்த முடியவில்லை என்பதால், உரிமக் காலத்தை நீட்டித்து வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதியரசர் சரவணன், குடிப்பகங்களை நடத்த டாஸ்மாக்குக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

‘‘1937-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் மது விற்கப்படுவதையோ, பார் என்ற பெயரில் அங்கு நொறுக்குத் தீனிகளை விற்கவும், மதுப்புட்டிகளை வாங்கவும் தனியாருக்கு உரிமம் வழங்குவதையோ அனுமதிக்கவில்லை. மதுவிலக்கு சட்டத்தின் 4ஏ பிரிவின்படி ஒருவர் மது போதையில் பொது இடங்களில் நடமாடினால் அவருக்கு 3 மாதம் வரை சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும்.

குடிப்பகங்கள் பொது இடம் இல்லை என்றாலும், அங்கு குடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் ஒருவர், பல பொது இடங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும். அப்படியானால், மதுவிலக்கு சட்டத்தின்படி குற்றமாக அறிவிக்கப்பட்ட ஒரு செயலை செய்ய துணைபோகும் குடிப்பகங்களை எவ்வாறு அனுமதிக்க முடியும்?’’ என்று நீதியரசர் சரவணன் வினா எழுப்பியுள்ளார். அவரது ஞானமும், சமூகத்தின் மீதான அக்கறையும் பாராட்டத்தக்கவை.

திருவள்ளுவரின் பெருமையையும், திருக்குறளின் சிறப்பையும் போற்றும் தமிழ்நாடு, அவர் போதித்த கள்ளுண்ணாமை குறித்த அறிவுரைகளை மட்டும் காற்றில் பறக்க விடுவது தான் வேடிக்கையாகும். தமிழ்நாட்டில் இன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் செய்யப்படுவதை விட மது வணிகம் சார்ந்த விஷயங்களில் தான் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு வழிவகுப்பவை என்பது தான் மிகவும் வேதனையாகும்.

புதிய கல்வி நிலையங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டாத அரசு, நடப்பாண்டில் 1551 புதிய குடிப்பகங்களை திறந்திருக்கிறது. அதன்மூலம் அரசுக்கும், தங்களுக்குமான வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளை நிர்வகிப்பவர்கள் துடிப்பது தான் இதற்குக் காரணம் ஆகும்.

மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதன்மை வருவாய் ஆதாரமாக ஓர் அரசு நம்புவது அந்த அரசுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவமானம்.

மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. இது தொடர்பாக விரிவான கொள்கை ஆவணத்தை கடந்த 2008 ஆம் ஆண்டே பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டிருக்கிறது.

மது வணிகத்தின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட, மது அருந்துவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்குவதற்காக 180% கூடுதல் தொகையை அரசு செலவழிக்க வேண்டியுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டால், மனிதவள சீரழிவு தடுக்கப்படுவதன் காரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 2 லட்சம் கோடி அதிகரிக்கும். இந்த நன்மைகளுடன் ஒப்பிடும் போது மதுவணிகம் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு. மது விலக்கு தான் தமிழகத்திற்கு மிகவும் சிறந்தது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், 3719 குடிப்பகங்களுக்கு புதிய உரிமம் வழங்குவதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். 3719 குடிப்பகங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்துடன் செயல்பட்டு வரும் மீதமுள்ள குடிப்பகங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் தமது எண்ணம் என்று முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

அந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது சிறந்த வாய்ப்பாகும். முதலில் அனைத்து மதுக் குடிப்பகங்களையும் மூடி விட்டு அடுத்தடுத்தக் கட்டங்களில் மதுக்கடைகளை மூடலாம். மாறாக, உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது, குடித்து விட்டு போதையில் பொது இடங்களில் நடமாடுவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளை திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அது தமிழக அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக் குடிப்பகங்கள் எத்தனை? அவை அடுத்த 6 மாதங்களில் எப்போது மூடப்படும்? அவற்றைத் தொடர்ந்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணை ஆகியவற்றைக் கொண்ட செயல்திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்