கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம்; மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் சிறப்பு பணிக்குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

"கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கான வரைவு விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு விட்டதாக மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை இது காட்டினாலும் கூட, இத்திட்டம் செயல்வடிவம் பெற இன்னும் பல தடைகளை கடக்க வேண்டும் என்பதும், அதற்கான நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசுகளால் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்பதும் தான் யதார்த்தங்கள் ஆகும்.

நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் காவிரி - கோதாவரி இணைப்புக்கான வரைவு திட்ட அறிக்கை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே இறுதி செய்யப்பட்டுவிட்டது.

இந்தியாவின் வற்றாத நதிகளில் ஒன்றான மகாநதியிலிருந்து சத்தீஸ்கர், ஒடிசா வழியாக கோதாவரிக்கு 429.60 டிஎம்சி தண்ணீர் கொண்டுவரப்படும். அத்துடன் கோதாவரியில் ஏற்கனவே உள்ள உபரி நீரையும் சேர்த்து மொத்தம் 922.48 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்படும்.

கிருஷ்ணா ஆற்றில் இருந்து ஆந்திர மாநிலத்தின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள 497.23 டிஎம்சி தண்ணீர் பெண்ணாற்றிற்கு திருப்பிவிடப்படும். பெண்ணாற்றிலிருந்து காவிரிக்கு 302.42 டிஎம்சி நீர் ஆண்டுதோறும் வழங்கப்படும். குறைந்தது 200 டிஎம்சி தண்ணீராவது தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. இதற்காக, சோமசீலா அணையிலிருந்து கல்லணைக்கு இணைப்புக் கால்வாய் ஏற்படுத்துவது தான் வரைவுத் திட்டம்.

இந்த வரைவுத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்தால், வரைவுத் திட்டத்தை இறுதி செய்யப்பட்ட திட்டமாக மாற்றி ரூ.86,962 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், இத்திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுவது தான் சிக்கலாகும். கோதாவரி பாயும் தெலுங்கானா இப்போதே இத்திட்டத்தை எதிர்க்கிறது.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை மகா நதியிலிருந்து தொடங்கினால், இணைப்புப் பணிகளை முடிக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் கோதாவரியிலிருந்து தொடங்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுபற்றி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை தேசிய நீர் மேம்பாட்டு முகமை என்ற அமைப்பு கடந்த அக்டோபர் 29ம் தேதி இணையவழியில் நடத்தியது.

அக்கூட்டத்தில், கோதாவரி ஆற்றின் உபரி நீர் தெலுங்கானத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு வேண்டும் என்பதால், அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது. வேண்டுமானால், மகாநதி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை முதலில் செயல்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் உபரி நீரை மட்டும் காவிரிக்கு வழங்கலாம் என தெலுங்கானம் உறுதியாகக் கூறிவிட்டது. தெலுங்கானத்தின் இத்தகைய நிலைப்பாடு கோதாவரி-காவிரி ஆறுகளின் இணைப்புத் திட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பெரும் பின்னடைவு ஆகும்.

காவிரிக்கு ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு மகாநதி, கோதாவரி ஆறுகளிலிருந்து கிடைக்கும் உபரி நீர் தான் ஆதாரம் ஆகும். மகாநதியை விட கோதாவரியில் தான் கூடுதல் உபரி நீர் உள்ளது என்பதால் தான், தெலுங்கானத்தில் உள்ள ஈச்சம்பள்ளி என்ற இடத்தில் கோதாவரி ஆற்றில் இணைப்புக் கால்வாயை வெட்டத் தொடங்கலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை தெலுங்கானம் எதிர்த்தால் காவிரி-கோதாவரி இணைபை செயல்படுத்த முடியாது.

கோதாவரி ஆற்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1100 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் எதிர்காலத் தேவைகளை கணக்கிட்டுத் தான் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்திற்காக 493 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. தெலுங்கானா கூறுவதைப் போல மகாநதியிலிருந்து கிடைக்கும் உபரி நீரை மட்டும் கொண்டு கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பதே உண்மை.

தெலுங்கானாவைப் போலவே வேறு சில மாநிலங்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அவற்றுக்கு அரசியல் காரணங்கள் இருக்கக்கூடும். அதை அனைத்தையும் சமாளித்து கருத்தொற்றுமை ஏற்படுத்துவது கடினமான பணி. கோதவரி - காவிரி இணைப்பை இப்போது ஒருங்கிணைக்கும் தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு ஏராளமான பிற பணிகள் இருப்பதால், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது.

எனவே, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துடன் தொடர்புடைய மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுடன் பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, 2002ம் ஆண்டில் நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டது போன்ற சிறப்புப் பணிக்குழு ஒன்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசும் அதன் தொடர்புகளைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி இணைப்புத் திட்டம் பற்றி கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்