நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாவை, தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை... > நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதித் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் கடந்த 2017-ல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வு காரணமாக கிராமப்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோவதாகவும், அதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
> கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கவில்லை.
> குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காததை அடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
» மீண்டும் சட்டப்பேரவையைக் கூட்டி நீட் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புக: அரசுக்கு வைகோ யோசனை
> கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்திலேயே சட்டம் இயற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, திமுக அரசு பொறுப்பேற்றதும், நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு பொதுமக்கள், கல்வியாளர்கள் உட்பட 86,342 பேரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்து, விரிவான பரிந்துரைகளை கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி அரசுக்கு அளித்தது.
> எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்துள்ளது. எனவே, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறலாம் என்று குழுவின் பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
> கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கும் இடங்கள் ஆகியவற்றுக்கு 12-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டிருந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ளவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
> குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், சட்ட முன்வடிவு அனுப்பப்படாமல் இருந்தது. இதையடுத்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர் நேரம் ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார்.
> இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அடுத்தகட்ட சட்டப் போராட்டம் குறித்து முடிவெடுக்க சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த எம்.பி.க்கள் குழு, நீட் தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை முன்வைத்தது.
> நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து வந்த நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யும்படி தமிழக அரசுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு எதிரானது: ஆளுநர் கருத்து இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் இளநிலை மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மற்றும் அதற்கு அடிப்படையான மாநில அரசின் உயர்மட்டக் குழு அறிக்கை ஆகியவற்றை ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.
சமூக மற்றும் பொருளாதாரத் தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் மருத்துவக் கல்வியில் சேர நீட் தேர்வுக்கு முந்தைய நிலையில் இருந்த சமூகநீதி தொடர்பாகவும் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டார். விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இந்த மசோதா, மாணவர்களின் நலன் குறிப்பாக, கிராமங்களைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வந்துள்ளார். எனவே, அந்த மசோதாவை தமிழக அரசுக்கு கடந்த பிப்.1-ம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டு, அதற்கான விரிவான காரணங்களையும் தெரிவித்துள்ளார்.
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மத்திய அரசு இடையிலான வழக்கில், சமூகநீதி தொடர்பான கோணத்தில் விரிவான ஆய்வை உச்ச நீதிமன்றம் நடத்தியது. அதன்பின் ஏழை மாணவர்களின் பொருளாதார நிலையால் அவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைக்காமல் இருப்பதை தடுக்கவும், சமூக நீதிக்காகவுமே நீட் தேர்வை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கதாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அடுத்தகட்ட நகர்வு: ‘நீட்’ தேர்வு தொடர்பான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டப்பேரவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதா, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசுக்கு அனுப்பப்படாத நிலையில், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த பிப்.1-ம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானதாக இருப்பதாகவும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகவும், நீட் தேர்வு சமூகநீதியை பாதுகாப்பதாகவும், ஏழை மாணவர்கள் சுரண்டப்படுவதை தடுப்பதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நீட் தேர்வானது, ஏழை கிராமப் புற மாணவர்களுக்கு எதிரானதாக வும், பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதிலும், இத்தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சமூகநீதிக்கு எதிரானது என்பதிலும் அனைவருக்கும் கருத்தொற்றுமை உள் ளது.
இதன் அடிப்படையில்தான், நீட் தேர்வு முறையால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை களையும் வகையில், சரியான மாற்று சேர்க்கை முறை குறித்து பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப் படையிலேயே சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள, இச்சட்டத்துக்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ள கருத்து கள் தமிழக மக்களால் ஏற்கத் தக்கவை அல்ல.
எனவே, ஆளுநர் தெரிவித் துள்ள கருத்துகளை ஆராய்ந்து நீட் தேர்வு பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதுடன், மீண்டும் சட்டப்பேரவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற் கான முயற்சிகளை அரசு முன் னெடுக்கும்.
இதுகுறித்து எடுக்கப்பட வேண் டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிப்.5-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட அரசு முடிவெடுத்துள்ளது என்று அவர் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிரொலி: நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில், அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்து குறித்து அன்றாடம் பேசிக் கொண்டிருந்த திமுக, தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தவுடன் அதற்காகக் குழுவை அமைத்து காலம் கடத்தி நான்கு மாதங்கள் கழித்து சட்டமுன்வடிவை தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இப்போது திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் சரியான தரவுகளையும், கருத்துக்களையும், ஆளுநரிடம் எடுத்துரைக்காததுதான். 2010ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோதே, மத்திய காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கிக் கொண்டிருந்தால் இன்று 'நீட்' என்ற பிரச்சனையே வந்திருக்காது. திமுகவின் செயல்பாடு தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல் அமைந்துள்ளது. எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற திமுகவின் சுயநலத்தால் இன்று ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கை இன்னும் மூன்று நான்கு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், திமுகவின் பேச்சை நம்பி தவறுதலாக வாக்களித்து விட்டோமே என்ற நினைப்புதான் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா அல்லது பயிற்சி நிலையங்களுக்குச் சென்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் கவனம் செலுத்துவதா என்று புரியாமல் மாணவ, மாணவியர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வினை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக வளர்ச்சிக்கும், தமிழக அரசுக்கும் தடையாக ருப்பார் என ஏற்கெனவே தெரிவித்தேன். நீட் தேர்வு விலக்குமசோதாவை திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. மாநில அரசு சொல்வதை மத்திய அரசுக்கு அனுப்புவதுதான் ஆளுநரின் கடமை. இந்த மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அரியலூர் மாணவி இறப்பில் பாஜக அரசியல் செய்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக மக்களின் உணர்வுக்கு எதிரானது. ஆளுநரின் இந்த அணுகுமுறை சமூக நீதி கேட்கும் மக்களை ஆத்திரமூட்டும். கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்கும் தமிழக அரசின் மீது மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநரின் அத்துமீறலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிவன்மையாக கண்டிக்கிறது. தமிழக மாணவர்களின் நலனையும், சமூகநீதிக் கொள்கை நடைமுறையையும் உறுதி செய்ய தமிழக அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டம் கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. எனவே, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி, ஆளுநருக்குஅனுப்ப வேண்டும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: நீட் தேர்வு தொடர்பான முடிவால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடிக்கிறது. நீட் தேர்வு மசோதாவை மீண்டும்ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவு ஏற்படுத்த வேண்டும். அல்லது நீட் தேர்வு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவு கிடைக்க வேண்டும்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு ஒப்பாகும்.ஆளுநரின் முடிவு ஜனநாயகத்துக்கும், சமூக நீதிக்கும் எதிரானது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்படும் தமிழக ஆளுநர் வி.என்.ரவியை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும்.
சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: ஏறத்தாழ 4 மாதங்கள் காலதாமதம் செய்து, மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்த ஆளுநர் முயல்கிறாரோ என சந்தேகம் ஏற்படுகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிரான ஆளுநரின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும்,கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்காத ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலச் செயலர் முரளி அப்பாஸ்: நீட் மசோதாவை திருப்பி அனுப்பியதன் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வை ஆளுநர் அவமதித்து விட்டார். ஆளும் கட்சிக்கெதிரான மோதல் போக்கை,மக்களுக்கு எதிரான மோதல் போக்காக மாற்றி தமிழகத்தின் கோபத்துக்கு ஆளுநர் ஆளாக வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
பாஜக புறக்கணிப்பு: நீட் விலக்கு மசோதா தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட நாளை (பிப்.5) சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago