புதிதாக உருவாகும் `கொளத்தூர் காவல் மாவட்டம்' - காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை

சென்னை: சென்னை பெருநகர காவலில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், அடையாறு, தி.நகர், பரங்கிமலை, அண்ணாநகர், புளியந்தோப்பு, அம்பத்தூர் ஆகிய 12 காவல் மாவட்டங்கள் இருந்தன.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் துறையைப் பிரித்து, தாம்பரம், ஆவடி என புதிதாக 2 காவல் ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டன.

தற்போது சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் 104, ஆவடியில் 25, தாம்பரத்தில் 20 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. மேலும், மத்திய குற்றப் பிரிவு, போக்குவரத்து, உளவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.

ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு, சென்னையில் இருந்து 20 காவல் நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, சென்னை காவல் எல்லையை புதிதாக வரையறை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காவல் எல்லையில் உள்ள மாதவரம் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட 6 காவல் நிலையங்கள், ஆவடிக்குச் சென்றுவிட்டன. மாதவரம், புழல் ஆகிய இரு காவல் நிலையங்கள் மட்டுமே சென்னை போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே, கூடுதலாக ராஜமங்கலம், வில்லிவாக்கம், புளியந்தோப்பு காவல் மாவட்டங்களில் உள்ள பெரவள்ளூர், செம்பியம், திரு.வி.க நகர் காவல் நிலையங்களை உள்ளடக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியான கொளத்தூர் பெயரில் புதியகாவல் மாவட்டம் உருவாக்குவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

வட சென்னையில் உள்ள புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை குற்றச் செயல்கள் கணிசமாக நடைபெறும் பகுதியாக போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். எனவே, இந்தப் பகுதியில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், புளியந்தோப்பு, பேசின்பாலம், ஓட்டேரி, வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், கொடுங்கையூர் ஆகிய 6 காவல் நிலையங்களை மட்டுமே வைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதேபோல, கோயம்பேடு காவல் மாவட்டம் என்ற பெயரில் அண்ணா நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, சிஎம்பிடி உள்ளிட்ட 8 காவல் நிலையங்களைக் கொண்டுஉருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒரு காவல் ஆணையர், 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 2 இணை ஆணையர்கள், 3 துணை ஆணையர்கள் மற்றும் தாம்பரத்துக்கு கூடுதலாக ஒரு துணை ஆணையர் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட இந்த 2 காவல் ஆணையர் அலுவலகங்களும் அடுத்த மாதம் முதல் முழு அளவில் செயல்படும் என்றும் காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE