மானாமதுரை நகராட்சியில் அரசியல் கட்சியினர் நுழைய முடியாத வார்டு

By செய்திப்பிரிவு

மானாமதுரை நகராட்சித் தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. நகராட்சியை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் எந்த கட்சியும் நுழைய முடியாத வார்டாக குலாலர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி உள்ளது.

இந்த பகுதி பேரூராட்சியாக இருந்தபோது 6-வது வார்டாக இருந்தது. தற்போது நகராட்சியில் 12-வது வார்டாக உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களில் 800-க்கும் மேற்பட்டோர் குலாலர் இன மக்களே உள்ளனர்.

இதனால் மூன்று தலைமுறைகளாக குலாலர் இனத்தைச் சேர்ந்த ஒருவரை அனைவரும் சேர்ந்து கட்சி சார்பின்றி நிறுத்துகின்றனர்.

சில சமயங்களில் போட்டியின்றி கூட தேர்வாகின்றனர். போட்டியிருந்தாலும் குலாலர் இன மக்கள் நிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறுவார். இந்த முறை செல்வராஜ் என்பவர் மனைவி நதியா(32) போட்டியிடுகிறார். இதையடுத்து இந்த வார்டில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.

இது குறித்து 12-வது வார்டைச் சேர்ந்த அடைக்கலம், ஆண்டவர் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் 5 பிரிவைச் சேர்ந்த குலாலர்கள் உள்ளோம். ஒவ்வொரு தேர்தலிலும் சுழற்சி முறையில் ஒரு பிரிவினரைத்தான் சுயேச்சையாக நிறுத்துவோம். வேட்பாளருக்கான தேர்தல் வைப்புத் தொகைகூட நாங்களே செலுத்துவோம். எங்கள் வார்டில் அரசியல் கட்சியினர் தலையிடமாட்டார்கள். வெற்றி பெற்றதும் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்து கொள்ளோம், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE