அண்ணா சிலையின் பூட்டு உடைப்பு வேலூரில் திமுகவினரால் சர்ச்சை?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் முக்கிய தலைவர்களின் சிலைகள் மறைக் கப்பட்டும் கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலை மற்றும் படத்துக்கு திமுக,அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி கோரிய கட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான அசோக்குமார் அனுமதி கடிதம் அளித்தார். அதில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த நேரத்தில் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப் பட்டது.

அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மாநகரச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது, அண்ணா சிலையின் கூண்டு பூட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்த எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் அந்த பூட்டை உடைத்து வீசிவிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திமுகவினரின் இந்த செயலுக்கு மாநகர அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் உரிய அனுமதி இல்லாமல் திமுகவினர் பூட்டை உடைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்ததாக குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ‘‘அனுமதி கேட்ட அரசியல் கட்சியினருக்கு அனுமதி அளித்தோம். திமுகவினர் பூட்டை உடைத்தார்களா? என தெரியவில்லை. விசாரிக்கிறேன்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE