சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படவிருக்கும் சூழ்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 29-01-2022 அன்று மதியம் அமிர்தலிங்கத்திற்கு சொந்தமான விசைப்படகில் பன்னிரெண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 31-01-2022 அன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பன்னிரெண்டு தமிழக மீனவர்களையும், விசைப்படகையும் இலங்கை மீனவர்கள் சுற்றிவளைத்து தகராறு செய்ததாகவும், இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 12 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்து மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இதேபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கோட்டுச்சேரி மேட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 31-01-2022 அன்று அதிகாலை ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கும் ஏழுக்கு மேற்பட்ட இலங்கை மீனவர்கள் வந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்த நிலையில் அங்கு வந்த இலங்கைப் படையினர் 9 இந்திய மீனவர்களையும் அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இலங்கை கடற்படையினரின் மேற்படி செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது.
மேற்படி சம்பவங்களில் மட்டும் 21 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் இரண்டு விசைப் படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை வருகிற 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தாலும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் மீனவர்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய கவலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக்கூடாது என்பதோடு, மத்திய அரசின் உதவியோடு இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்து பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவ மக்களிடையே தற்போது நிலவுகிறது.
எனவே, முதல்வர் இது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, தேவையான அழுத்தத்தை அளித்து, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களையும், இரண்டு விசைப்படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago