சென்னை: சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டிய சென்னை-ஏ அலைவரிசையை மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசை சேவையை நிறுத்த பிரசார்பாரதி அமைப்பு முடிவு செய்திருப்பதாகவும், எந்த நேரமும் அதன் சேவை நிறுத்தப்படக்கூடும் என்று தெரியவந்துள்ளது. சென்னை வானொலி நிலையத்தின் இரு அலைவரிசைகள் அண்மையில் மூடப்பட்ட நிலையில், சென்னை வானொலியின் அடையாளமான முதன்மை அலைவரிசையையும் மூட முயல்வது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை-ஏ என்றழைக்கப்படும் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை 720 KHz மத்திய அலையில் ஒலிபரப்பாகி வருகிறது. விவசாயம், குடும்பநலம், இசை நிகழ்ச்சிகள், நாடகம், கிராமப்புற இசை, செய்திகள், திரை இசை, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான நிகழ்ச்சிகள் என பலவகை நிகழ்ச்சிகள் சென்னை-ஏ அலைவரிசையில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்காக லட்சக்கணக்கான நேயர்கள் உள்ளனர். தமிழ்ப் பண்பாடு, கலைகள் ஆகியவற்றின் தூதராகவும் இந்த அலைவரிசை திகழ்கிறது. பண்பாட்டு சிறப்புமிக்க நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வரும் சென்னை-ஏ அலைவரிசையின் சேவையை நிறுத்தி விட்டு, அதில் ஒலிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் சென்னை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும்படி பிரசார்பாரதி உயரதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக தெரிகிறது.
» மத்திய பட்ஜெட் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கும்: ஓபிஎஸ் வரவேற்பு
» 7 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்தாததால் மக்கள் பாதிப்பு: நாராயணசாமி
சென்னை-ஏ ஒலிபரப்பு நேற்றுடன் நிறுத்தப்படவிருந்ததாகவும், தொழில்நுட்ப காரணங்களால் அம்முடிவு கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த நேரமும் சென்னை-ஏ அலைவரிசை நிறுத்தப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. சென்னை-ஏ அலைவரிசை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டால், அது சென்னை வானொலி நிலைய நேயர்களுக்கு பேரிழப்பாக அமைந்து விடும். சென்னை-ஏ அலைவரிசையில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை 300 கி.மீ சுற்றளவில் கேட்க முடியும். ஆனால், அதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை ரெயின்போ பண்பலையில் ஒலிபரப்பும் போது, அதிகபட்சமாக 50 கி.மீ சுற்றளவில் உள்ளவர்கள் மட்டும் தான் கேட்க முடியும். இதனால் சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை எந்த நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதைந்து விடும்.
சென்னை வானொலியை உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வானொலிகளில் ஒன்றாக கருத முடியாது. உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வானொலிகளில் சென்னை-ஏ அலைவரிசையும் ஒன்று. உலகின் முதல் வானொலி 1920ம் ஆண்டு அமெரிக்காவிலும், இரண்டாவது வானொலி 1922ம் ஆண்டு இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டன. சென்னை வானொலி ’மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப்” என்ற பெயரில் 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1938ம் ஆண்டு ஜூன் 16ம் நாள் அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி நிலையமாக மாற்றப் பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டிய சென்னை-ஏ அலைவரிசையை மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இம்முடிவு கைவிடப்பட வேண்டும்.
சென்னை வானொலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சென்னை-ஏ, சென்னை-பி, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான சிற்றலை ஒலிபரப்பு, ரெயின்போ பண்பலை, கோல்டு பண்பலை ஆகிய 6 அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வந்தன. இவற்றில் சிற்றலை ஒலிபரப்பு சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டு விட்டது. சென்னை-பி அலைவரிசை கடந்த ஜனவரி 14ம் தேதியுடன் மூடப்பட்டு, அதன் நிகழ்ச்சிகள் இப்போது கோல்டு பண்பலையில் ஒலிபரப்பாகின்றன. சென்னை-பி அலைவரிசை மூடப்பட்டதை அப்போதே கண்டித்திருந்தேன். எந்த நேரமும் சென்னை-ஏ அலைவரிசை மூடப்பட்டால் சென்னை வானொலியில் 3 அலைவரிசைகள் மட்டுமே இருக்கும். வர்த்தக ஒலிபரப்புக்கும் முடிவு கட்டப்பட்டால் அதன்பிறகு பண்பலைகள் மட்டுமே சென்னை வானொலியில் இருக்கும்.
மத்திய அலை, சிற்றலையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப டிரான்ஸ்மிட்டர்கள் தேவை. அவற்றை பராமரிப்பது செலவு பிடிக்கும் விஷயமாகும். அதனால் சென்னை வானொலி மற்றும் நாடு முழுவதும் உள்ள அகில இந்திய வானொலி நிலையங்களுக்கு உள்ள டிரான்ஸ்மிட்டர்களை அகற்றுவதன் மூலம் செலவைக் குறைப்பதுடன், அவை அமைக்கப்பட்டுள்ள நிலங்களை தனியார்மயமாக்கி வருவாய் ஈட்டும் நோக்குடன் தான் மத்திய அலை, சிற்றலை வானொலிகளை மூட பிரசார்பாரதி திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இது மிகவும் தவறான முடிவு மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டிய முடிவும் ஆகும்.
மத்திய அலை, சிற்றலை வானொலிகளை மூடுவதால் தரமான நிகழ்ச்சிகளை கிராமப்பகுதிகளிலும், தொலைதூரங்களிலும் உள்ள மக்கள் கேட்க முடியாத நிலை ஏற்படும். பண்பலைக்காக தனி நிகழ்ச்சிகள் இருக்காது என்பதால் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், டிரான்ஸ்மிட்டர்கள் கைவிடப்படுவதால் ஏராளமான பொறியாளர்களும் வேலை இழப்பர். இவற்றைக் கடந்து வான் ஒலிபரப்பில் மன்னராக திகழும் அகில இந்திய வானொலி, வெறும் பண்பலைகளை நடத்தும் சிப்பாயாக மாறிவிடும். அப்படி ஒரு நிலை வரக்கூடாது.
சீனா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் உள்ள நாடுகள் சிற்றலை, மத்திய அலையில் தங்களின் ஒலிபரப்பு சேவையை வலுப்படுத்தி வருகின்றன. உணவுக்காகவும், எரிபொருளுக்காகவும் இந்தியாவிடம் கடன் வாங்கும் இலங்கை, கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் மத்திய அலையில் கொழும்பு சர்வதேச வானொலி என்ற பெயரில் பிரமாண்ட பன்னாட்டு ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா வானொலி சேவைகளை குறைப்பது நகைப்புக்கும், கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகும்.
எனவே, சென்னை-ஏ அலைவரிசையை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எந்த மத்திய மற்றும் சிற்றலை ஒலிபரப்பையும் மூடும் திட்டத்தை பிரசார்பாரதி கைவிட வேண்டும். மாறாக, நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தி வானொலிகளின் வருவாயை அதிகரிக்கச் செய்ய வேண்டும்."
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago