சுயமரியாதையோடு இருக்க விரும்புகிறோம் 3 வார்டுகளில் மட்டும் போட்டியிட தயாராக இல்லை: நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தி

திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் ஒதுக்கப்பட்டதால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் நடத்தி சுயமரியாதையோடு இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில், 48 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகள் மட்டுமே ஒதுக்கியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. திமுக கூட்டணியில் 3 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை ஏற்க முடியாது என்று நிர்வாகிகள் பேசினர். குறைந்தது 8 இடங்களையாவது ஒதுக்க வேண்டும். கூடுதல் இடங்களை பெறுவதற்கு மாநிலத் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன் கூறும்போது, “திருநெல்வேலி மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை பெற்றுத்தர கட்சி தலைமை,திமுக தலைமையுடன் பேச வேண்டும். வெறும் 3 இடங்களில் மட்டுமே போட்டியிட நாங்கள் தயாராக இல்லை. குறைவான இடங்களை பெற்று போட்டியிட எங்களுக்கு விருப்பமில்லை.

மாநில தலைமை அனுமதி அளித்தால் திருநெல்வேலி மாநகராட்சியில் 36 வார்டுகளில் தனித்து போட்டியிட தயாராகஉள்ளோம். காங்கிரஸ் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் இருக்க விரும்புகிறது. ஆனாலும்,கூட்டணி தர்மத்தை கருத்தில் கொண்டு திமுக கூட்டணி வெற்றிக்கு தேர்தல் பணியாற்றுவோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE