சென்னை: "இன்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23-ம் மத்திய பட்ஜெட்டை 'மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை' என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் அமைந்திருக்கிறது. தனிநபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த உழவர்களுக்கு நலத் திட்டங்கள் இல்லை, தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதியுதவி இல்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்களும் இல்லை, மழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி ஒதுக்கீடும் இல்லை என்ற நிலையில் ஒரு நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருப்பது தமிழ்நாட்டிற்கும் - தமிழ்நாட்டு மக்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கோதாவரி – பெண்ணாறு - காவிரி நதிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை மட்டுமே தயார் என்ற அறிவிப்பு இருப்பது ஆறுதல் அளித்தாலும், அறிவிப்பினை செயல்படுத்த முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டினைக் கூட நிதிநிலை அறிக்கையில் காண முடியவில்லை என்பது கவலையளிக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ராணுவ பெருவழித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதால், இத்துறையிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தினைப் பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டினை ரூ.25 ஆயிரம் கோடி அளவிற்குக் குறைத்திருப்பது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதற்கான முயற்சியாக மட்டும் தெரியவில்லை; அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்கக் கூடாது என்ற எண்ணவோட்டத்தையே வெளிப்படுத்துகிறது.
'கூட்டுறவு கூட்டாட்சியின்' அடிப்படையில் மாநில மூலதன முதலீடுகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு எனக்கூறி, மாநிலங்களுக்கு நிதி அளிக்கப் போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், இந்த நிதி ஒதுக்கீடு முக்கியமாக பிரதமரின் 'கதிசக்தி' திட்டத்திற்கே பயன்படுத்தப்படும் என்பது மாநிலத்தின் பெயரைச் சொல்லி நிதி ஒதுக்கி ஒன்றிய அரசே தனது திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமான நிதி ஒதுக்கீடாகவே காட்சியளிக்கிறது. இந்த ஒரு லட்சம் கோடி ரூபாயும் மாநிலங்களுக்கு நிபந்தனைகளின்றி பகிர்ந்து அளிக்கப்படும் விதத்தில் நிதிநிலை அறிக்கை அறிவிப்பு அமைந்திருந்தால் நானே முதலில் வரவேற்று இருப்பேன். ஆனால் அந்த நிதி ஒதுக்கீடு செய்வதற்குப் பல்வேறு நிபந்தனைகளை உருவாக்கி இந்த நிதி உரிய வகையில் மாநில அரசுகளுக்குக் கிடைக்காதவாறு செய்திருப்பது மாநில அரசுகளுக்கு எந்தவகையில் உதவும்?
» 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
பருவநிலை மாற்றத்தைப் பற்றி பிரதமரே பன்னாட்டு கருத்தரங்குகளில் வாக்குறுதி அளித்து விட்டு அந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு இதற்காக எவ்வித புதிய அறிவிப்புகளோ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லாத நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. அதேபோல் “One Nation One Registration” என்று மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருப்பது, எந்த அறிவிப்பினைச் செய்தாலும் மாநில உரிமைகளை எப்படிப் பறிப்பது என்பதை மட்டுமே ஒன்றிய அரசு கவனத்தில் கொண்டு செயல்படுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
கரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட வாழ்வாதார, பொருளாதார இழப்பில் இருந்து மக்களை மீட்கும் நலத் திட்டங்களாக எதிர்பார்த்த நேரடி பண உதவி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் திட்டங்கள், ஆக்கபூர்வமான மானியங்கள் போன்ற எதுவும் இல்லை. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை நிலைமையை எதிர்கொள்ள ஒன்றிய அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்பதோடு, 2022-23ம் ஆண்டுக்கான மாநில அரசுகளுக்கு மொத்த நிதிப்பற்றாக்குறை வரம்பு 4 விழுக்காடு எனச் சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதில், மின்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டால் மட்டுமே 0.5 விழுக்காடு அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்குப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இக்கட்டான இந்த நிதிச் சூழலில் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் குறைந்தபட்சம் 5 விழுக்காடு நிதிப்பற்றாக்குறை வரம்பை மாநில அரசுகளுக்கு அனுமதித்திருக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை 30.6.2022 உடன் நிறைவடையும் சூழலில், இத்தொகை வழங்குவதை தொடர வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை புறக்கணித்திருப்பது ஒன்றிய - மாநில அரசுகளின் நல்லுறவிற்குக் கை கொடுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் பெரியண்ணன் மனப்பான்மையையே காட்டுகிறது. சுருங்கச் சொன்னால், மக்களுக்கு நம்பிக்கையூட்டும் திட்டங்களை அளிக்க மறந்து, குறிப்பாக 5 மாநிலத் தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித்தவித்த மக்களின் எதிர்பார்ப்பைப் புறக்கணித்து, மக்களைப் பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கையை 'மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை' என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 secs ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago