சென்னை: கடந்த ஏழு ஆண்டு காலமாக தமிழகத்தில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு சரியாக இல்லை. இந்த நிதி நிலை அறிக்கையிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை இருக்கும் என்று, பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவதை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் இல்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) ஒரே நிலையில்தான் இருக்கின்றது. முந்தைய நிதி ஆண்டில் சேவைத் துறை வளர்ச்சி விகிதம் -8.4 விழுக்காடு அளவு படுபாதாளத்தில் இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் அதனை மீட்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் அது தொடர்பான துறைகளின் வளர்ச்சி, பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டபடி 3.9 விழுக்காடு உயர்வதற்கு, நிதிநிலை அறிக்கையில் அதற்கு ஏற்ப திட்டங்கள் இல்லை.
இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டப்படி, 60 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த ஏழாண்டு கால பாஜக அரசில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை ஆகும். கரோனா தொற்று பாதித்த கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், அனைத்துத் துறைகளிலும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளது.
சுமார் 4.6 கோடி மக்கள் வறுமையில் உழல்வதாகவும், உலகப் பட்டினிக் குறியீட்டின் 116 நாடுகளில் இந்தியா 104-ஆவது இடத்தில் இருப்பதையும், புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 15 கோடி ஏழை மக்களின் வருவாய் 53 விழுக்காடு குறைந்து விட்டது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் பெரிதும் வீழ்ச்சியடைந்த உற்பத்தித் தொழில் துறை மீண்டு எழுவதற்கு வழிவகை காணப்படவில்லை. ரூ. 10 இலட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் 80-சி என்ற வரிவிலக்கு உச்ச வரம்பு நீண்டகாலமாகவே ரூ. 1.5 இலட்சம் என்று இருப்பதை மாற்ற வேண்டும். பிஎப்., ஈஎஸ்ஐ., என பலவற்றிலும் உச்சவரம்புகள் மாற்றப்பட்டது போல் 80-சி திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி’ என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து முயற்சித்து வரும் மோடி அரசு, மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் உரிமைகளைப் பறிக்கவும், ‘ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு’ திட்டத்தையும் கொண்டு வருகின்றது. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் முறை ஏற்கனவே மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘ஒரு நாடு; ஒரு பதிவு முறை’ என்பதும் மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கான முயற்சி ஆகும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை, இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக் குறியீட்டை மேம்படுத்த உதவி உள்ளதாகவும், நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் நிதி அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். ஜிஎஸ்டி வரி நிதிப் பகிர்வு மாநிலங்களுக்கு பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்யாத மத்திய அரசு வட்டி இல்லா நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கின்றது. கடந்த ஏழு ஆண்டு காலமாக தமிழகத்தில் ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு சரியாக இல்லை. இந்த நிதி நிலை அறிக்கையிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது" எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago