புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரி வித்து திட்டமிட்டப்படி இன்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறும். மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசே பொறுப்பு என்று மின்துறை தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்துள்ளது.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறது.
புதுவை மின்துறையில் பணியாற்றும் பொறியாளர்கள், ஊழியர்கள் சங்கத்தினர் ஒருங்கிணைந்து மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி, தனியார்மயத்துக்கு எதிராக தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். என்ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் பணிகளைபுறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.போராட்டத்தை தடுக்க தொழிலாளர் தாவா சட்டத்தின் கீழ் மின்துறையை அத்தியாவசிய பணிகள் துறையாகஅரசு அறிவித்துள்ளது. ‘வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது - மீறினால் துறை ரீதியான நடவடிக்கை, ஊதியம்தரப்படாது’ என்று மின்துறை தலைவர் சண்முகம் எச்சரித்துள்ளார். இதற்கிடையே, திட்டமிட்டபடி இன்று(பிப்.1)முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளனர்.
3 ஆயிரம் பேர் பங்கேற்பு
இதுதொடர்பாக புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய, கார்ப்பரேஷன் மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலர் வேல்முருகன் ஆகியோர் கூறியதாவது:
புதுவை அரசானது மத்திய அரசு தரும் நிதியை பெருவதற்கு மின்துறையை அடமானம் வைக்கிறது. இதன் பாதிப்பு என்பது பொதுமக்களுக்குதான் அதிகம். இப்போராட்டம் மக்கள் போராட்டமாக மாறினால் தான் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள அரசு சொத்துக்கள் பாதுகாக்கப்படும். அரசாங்க துறைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தையே அரசால் சரிவர செலுத்த முடியாமல் நிதி சிக்கலில் சிக்கியுள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் இலவச மின்சாரத்திற்கான பணத்தை புதுவை அரசு எவ்வாறு வழங்கும். குறைவான மின் இழப்பு, குறைவான மின் கட்டணம், விரைவான சேவையை மின்துறை செய்து வருகிறது.
புதுவை அரசு மின்துறையை கார்பரேஷன் அல்லது தனியார் மயமாகவோ மாற்றிடாமல், அரசு துறையாக நீடிக்கும் என்று அரசு அறிவிக்கும் வரை மின்துறை தலைமை அலுவலகத்தில் எங்களின் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டம் இன்று (1ம் தேதி) முதல் திட்டமிட்டப்படி நடைபெறும்.
இப்போராட்டத்தில் மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். ஆளுங்கட்சியை தவிர்த்து இதர கட்சியினர் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
ஆனால், மின்துறை தலைவரோ `போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மிரட்டல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், ‘மின்துறை தனியார் மயமாக்கப்பட்டால் துரித சேவை கிடைக்கும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுவரை மின்துறை சேவை துரிதமாக நடைபெறவில்லை என்று மின்துறை தலைவரே ஒப்புக் கொள்கிறாரா?
முதல்வர் பேச வேண்டும்
கடந்த ஆட்சியில், மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் அனைவரும் மவுனம் காப்பதன் பின்னணி என்ன என்று தெரியவில்லை. ஆட்சியாளர்கள் தனியார் மயத்தை ஆதரிக்கிறார்களா? என்று தெளிவுபடுத்த வேண்டும்.
இன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்த போராட்டம் என்பது நாங்களாக எடுத்த முடிவல்லை.
எங்களை போராட்டக் களத்துக்கு அரசும், நிர்வாகமும் தள்ளி உள்ளது என்பதே உண்மை. எந்த வேலையையும் செய்யாமல் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், இயற்கையாக நடைபெறும் மின் இடர்பாடுகளை சரி செய்ய ஆட்கள் இருக்க மாட்டார்கள். இதற்கு போராட்டக்குழுவோ, தொழிலாளர்களோ காரணம் அல்ல. இதற்கு அரசும், நிர்வாகமும்தான் காரணம். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்.
இதுவரை முதல்வரும், மின்துறை அமைச்சரும் எங்களை அழைத்து பேசவில்லை. இதுதொடர்பான அமைச்சரவை கோப்பில் முதல்வர் கையெழுத்து போடவில்லை என்று தகவல் வந்துள்ளது.
அது உண்மையா என்று தெரியவில்லை. தனியார் மயத்தை கைவிடுவோம் என்று முதல்வர் உறுதியளித்தால் மட்டுமே போராட்டக்குழு கூடி போராட்டத்தை கைவிடுவது பற்றி மறுபரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago