'பணம் பெற்றால் வாக்குகளுக்கு மதிப்பில்லை' - டம்மி பணத்துடன் மனு தாக்கல் செய்ய வந்த மதுரை வேட்பாளர்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: 'வாக்களிக்க பணம் பெற வேண்டாம்' என்ற விழிப்புணர்வுக்காக சுயேச்சை வேட்பாளர் டம்மி பணத்துடன் வந்த ருசிகரமான சம்பவம் மதுரை வேட்பு மனுதாக்கலின்போது இன்று நடந்தது.

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து செய்கின்றனர். முக்கிய கட்சி வேட்பாளர்கள் இன்னும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 24-வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அவர் கையில் கட்டுகட்டான டம்மி பணத்துடனும், கையில் 'ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது' என்ற வாசகங்கள் குறிப்பிட்ட பாதாகையுடன் வந்திருந்தார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதற்கு அவரோ, வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு பணம்பெற வேண்டாம் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகதான் கையில் தட்டு முழுவதிலும் 2 ஆயிரம், 500 ரூபாய், 200 ரூபாய் டம்மி பணத்துடன் வந்ததாக தெரிவித்தார்.

போலீசார் டம்மி பணமாக இருந்தாலும் வேட்புமனு தாக்கல் செய்ய அதனுடன் அனுமதிக்கமுடியாது என்று டம்மி பணத்தை பறிமுதல் செய்து வேட்புமனுவுடன் மட்டும் அவரை தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தார்.

இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் கூறுகையில், ''மாநகராட்சியில் போடப்படும் சாலைகள் முதல் நடக்கும் அனைத்து திட்டங்களிலும் முறைகேடு நடக்கிறது. மக்களை நல்ல திட்டங்கள் சென்றடையவதில்லை. பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மக்கள் பிரதிநிதிகள் இருந்தபோதும், தற்போது அதிகாரிகள் இருக்கிறபோதும் எதுவும் நடக்கவில்ல. வாக்காளர்கள் தேர்தல் நேரத்தில் பணத்தை பெற்றுகொண்டு வாக்களித்து விடுகின்றனர். அது தவறு என்பதை விழிப்புணர்வு செய்வதற்காக டம்மி பணத்தை போன்று மதிப்பில்லாத வாக்காக மாறிவிடும். அதனை உணர்த்தும் வகையில் இது போன்று டம்மி பணத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். யாருக்கேனும் நல்ல வேட்பாளர்களாக பார்த்து பணம் பெறாமல் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும்,'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE