அதிமுகவினர் எங்கள் கூட்டாளிகள்; பாஜக தொண்டர்களுக்காகவே தனித்துப் போட்டி: வானதி சீனிவாசன்

By க.சக்திவேல்

கோவை: அதிமுகவினர் தங்களின் மதிப்புமிக்க கூட்டாளிகள் எனவும், இரு கட்சியினரும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்கவே தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கிறோம். மாணவி இறக்கும் முன் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பள்ளியைச் சேர்ந்த ஒரு சிலர் தன்னை மதமாற்றம் செய்ய முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த மாணவி மதமாற்றத்தை பற்றி பேசியுள்ளார். ஆனால், அங்கு இருக்கும் காவல்துறை உயர் அதிகாரி, ’மதமாற்றம் அங்கு நடக்கவே இல்லை. வீடியோவில் உண்மை இல்லை’ என எந்த விசாரணையும் இல்லாமல் தானாக சான்று அளிக்கிறார். அதன்பின் மாநில அமைச்சர்கள் அங்கு அவ்வாறு நடைபெறவில்லை என சான்றளிக்கின்றனர்.

இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, நீதி வழங்கப்படும் என்ற உறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கவில்லை. அதற்கான தீர்வை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது. இந்த வழக்கின் மூலம், தான் பதவியேற்ற சில காலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இழந்துள்ளார்.

கோவையின் எல்லா வார்டுகளிலும் போட்டியிட பாஜக தயாராக உள்ளது. அதிமுகவை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் எங்களின் மதிப்புமிக்க கூட்டாளிகள். அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சியினரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் தொண்டர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தனித்துப் போட்டி என முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்று அவர் கூறினார்.

அண்ணாமலை அறிவிப்பு: முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும். தனித்து போட்டியிடுவது என்பது கடினமான முடிவல்ல, தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். அதிமுகவுடனான இந்தக் கூட்டணி முறிவுக்கு நயினார் நகேந்திரன் பேச்சு காரணம் இல்லை. விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE