முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முகாம்களுக்கு வெளியில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமு மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவில், முகாம்களுக்கு வெளியில் வசிக்கும், 32 ஆயிரத்து 242 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் உள்ள 108 முகாம்களில் உள்ள 94 ஆயிரத்து 69 அகதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், கரோனா ஊரடங்கின் போது, முகாமுக்கு வெளியில் வசித்த அகதிகளுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொந்த தொழில் மற்றும் வேலைக்குச் செல்வதால் முகாமுக்கு வெளியில் வசிப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கரோனா உதவி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி அரசை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அரசின் முடிவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE