அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு: ஏழைகளின் மருத்துவராகும் கனவு நனவாகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: 2021-22-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான மொத்த இடங்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி 437 எம்பிபிஎஸ், 107 பிடிஎஸ் என மொத்தம் 544 இடங்கள் ஒதுக்கப்பட்டன.

அதில், நடந்து முடிந்த முதல்கட்ட கலந்தாய்வில் 437 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 541இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.

சேலம் ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 9 மாணவிகள், திருநெல்வேலி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 3, மதுரை ஈவெரா, அவ்வையார் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் படித்த 17 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் கூலித் தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், விவசாயி போன்ற அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் மருத்துவராகின்றனர்.

குறிப்பாக, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 200-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இவைதவிர, 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கும், தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. வறுமையிலும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலும்கூட அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவை 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நனவாக்கியுள்ளது.

நீட் தேர்வு வருவதற்கு முன்ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், நீட் தேர்வுக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. இந்த எண்ணிக்கை 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்குப் பின் மூன்று இலக்கமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் 433 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இந்த ஆண்டு புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 541-ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது கட்ட கலந்தாய்வில் மேலும் 10-க்கும் மேற்பட்ட இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது, “நீட் தேர்வு வந்தபின், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கு செல்வது குறைந்தது. அதேசமயம், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு என்பது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான். நீட் தேர்வுக்கு முன் 40-க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களுக்கே மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் தற்போது 541 பேர் மருத்துவராக உள்ளனர்.

இதுமட்டுமின்றி, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து முடிக்கும்வரை, அவர்களுக்கான கல்வி, உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் தமிழக அரசே ஏற்கிறது.

இதனால், அரசுப் பள்ளிகளில்இருந்து மருத்துவப் படிப்புக்குவிண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE