நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசி கட்சியினரை நிற்க வைத்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பேச வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமர்வதற்கு நாற்காலி கூட போடாமல் நிற்க வைத்து பேசி அனுப்பி வைத்த படம் வைரலாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பங்கீடு தொடர்பாக அந்தந்த மாவட்ட, ஒன்றியநிர்வாகிகள் தலைமையில் பேசி முடிவெடுத்துக் கொள்ள திமுக தலைமை அறிவுறுத்திஉள்ளது. அதன்படி வடலூர் நகராட்சி, குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்கள் தேர்வு மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கான வார்டு பங்கீடு குறித்தும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமைச்சரிடம் முறையீடு

அந்த வகையில் வடலூர் நகராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், அக்கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு தரப்பினர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்துக்கு சென்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் உட்காருவதற்கு நாற்காலி கூட இல்லாமல் நிற்கவைத்து பேசி அனுப்பிவைத்துள்ளதாக படம் ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கரோனா தொற்று காரணமாக யாரையும் அவரது அறைக்குள் அனுமதிப்பதில்லை. முக்கிய விஷயம் என்றால் மட்டுமே உள்ளே அனுமதிப்பார். அதுவும் சில விநாடிகள் என்பதால், நாற்காலி போடுவதில்லை’’ என திமுகவினர் விளக்கமளித்தனர்.

விசிக நிர்வாகி மறுப்பு

இதுகுறித்து கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தனிடம் கேட்டபோது, ‘‘அவ்வாறு கூறுவது தவறு. அவர் அனைவருடனும் அன்பாகவும், இணக்கமாகவும் இருக்கக் கூடியவர். எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டபோது, என்னிடம் தொலைபேசியில் பேசி சிகிச்சைக்கு பரிந்துரைத்தவர். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவரைபார்க்க முடியவில்லை. எனவே நேற்று (நேற்றுமுன்தினம்) பார்த்துவிட்டு வருவோம் என்று எண்ணித்தான், அங்கு சென்று உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு உடனே வெளியே வந்தோம். அதற்குள் யாரோ படம் எடுத்துவிட்டனர்’’என்று தெரிவித்தார்.

இந்த புகைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். விசிக நிர்வாகிகளை அமரவைக்காமல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திய எம்.ஆர்.கேவின் போக்கு வேதனை அளிப்பதாக மகா.விபீஷணன் என்பவர் சமூக வலைதளத்தில் கண்டனப் பதிவிட்டிருந்தார். சமத்துவம், பகுத்தறிவு பேசும் பலர் நடைமுறை வாழ்க்கையில் பண்ணையார் வழிகளில்தான் செயல்படுவர் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

‘சில ஆன்மிக அமைப்புகள் குறித்தும், பிற மத அமைப்புகள் செயல்பாடுகள் குறித்தும் விமர்சிக்கும் சமத்துவப் போராளிகள், தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைப்பதில்லையே ஏன்’ என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

வருத்தம்

இதற்கிடையே திமுகவினர் கூற்றுப்படி, நோய் தொற்றுக் காலம் என்றே வைத்துக் கொண்டாலும் எதிரே இருப்பவர்கள் நின்றிருக்கும் நிலையில், இவரும் எழுந்து நின்று சமத்துவத்தோடு பேசியிருக்கலாமே என்பதுதான் திமுக கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் பிற கட்சியினரின் வருத்தமான குரலாக உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசியபோது, “அமைச்சர் ராஜகண்ணப்பன் திருமாவளவனை அவமதித்துவிட்டார். இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா?'' என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

அப்போது அதற்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி வன்னியரசு, "எங்கள் தலைவர்தான் விருப்பப்பட்டு அந்த நாற்காலியில் அமர்ந்தார். நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது கால்மேல் கால் போட மாட்டார். அவருடைய அணுகுமுறை முதிர்ச்சியாக இருக்கும். கட்சித் தொண்டர்கள் வீட்டுக்குப் போனால், பாயில் உட்கார்ந்து கொள்வார். அது அவருடைய இயல்பு” என விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்