காந்தியின் கொலைகாரர்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வாதாடுவதா?- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

By செய்திப்பிரிவு

கோவையில் காந்தியின் கொலைகாரர்களுக்காக காவல்துறை அதிகாரிகள் வாதாடுவதா? என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிச் கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 அன்று கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்தா காலனியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார்.

இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுள்ளார்கள். உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, ‘காந்தியை கொலை செய்தது கோட்சே’ என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்துள்ளனர். ‘காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல’ என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை.

நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கையாகும். காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்சே தான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்க வேண்டும்? சில காவல்துறையினர் சிந்தனையில் காவிச் சிந்தனை குடிகொண்டிருப்பது அனுமதிக்கக் கூடியது அல்ல. இத்தகைய அதிகாரிகள் பாரபட்சமின்றி செயல்படுவார்களா? என பல கேள்விகள் எழுகின்றன.

காந்தி நினைவுநாள் நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோட்சேவின் வாரிசுகளுக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை தெளிவுபடத் தெரிவித்துள்ளார். இதனை சம்மந்தபட்ட கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE