புதுச்சேரி மக்களுக்கு எனது கடைசி கடிதம்: கிரண்பேடி

புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு எனது கடைசி கடிதம் என்று நீக்கப்பட்ட ஆளுநரான கிரண்பேடி வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இருந்தார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அவருக்கும், அமைச்சரவைக்கும் கடும் மோதல் நிலவியது. கடந்தாண்டு தொடக்கத்தில் அவரது செயல்பாட்டினால் போராட்டம் அதிகரித்தது. மக்கள் கடும் பாதிப்பில் அதிருப்தியில் இருந்தனர். இச்சூழலில் அவர் நீக்கப்பட்டு தெலங்கான ஆளுநர் தமிழிசை பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட கடித விவரம்:

"புதுச்சேரி மக்களுக்கு எனது கடைசி கடிதம் இது. புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பணியாற்றிய கடந்த மே 29, 2016 முதல் பிப்ரவரி 16, 2021 வரை எனது சேவையின் போது நான் உங்களுக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன். இதுதான் கடைசி கடிதம் . புதுச்சேரியில் பணியாற்றிய விலைமதிப்பில்லாத என் நினைவுகளை நான் என்னுடனேயே மறைந்து போக விரும்பாததால்தான் தற்போது ‘Fearless Governance’ (அச்சமற்ற ஆட்சி) என்ற புத்தகத்தை நான் ஏன் எழுதியுள்ளேன் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

குறிப்பாக புதுச்சேரி இளைஞர்கள், குழந்தைகளுக்காக இதை எழுதியுள்ளேன். இந்தியாவிலேயே மிக அழகான பகுதியான புதுச்சேரியின் செழுமைக்காக விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். புதுச்சேரியை நீர்வளமாக்கவும், தூய்மையாக்கவும் எடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் நினைவுப்படுத்தவும் என்னால் செயல்படுத்த முடிந்ததை இப்புத்தகத்தில் எழுதியுள்ளேன். ஆதாரப்பூர்வமற்ற எதையும் எழுதவில்லை. உங்கள் அனைவருக்கும் எப்போதும் வளமான புதுச்சேரி அமைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE