மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு குறி வைக்கும் காங்கிரஸ்: கூடுதல் வார்டுகளில் களமிறங்கத் திட்டம்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் கூடுதல் வார்டுகளில் களமிறங்க திட்டமிட்டு, திமுகவினரிடம் 25 வார்டுகளை கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்.19-ல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்.4. இதையொட்டி தேர்தல் பணிகளும் களை கட்ட தொடங்கியுள்ளது. கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சிகளிடம் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள இடங்களை பெறுவதில் கூட்டணியிலுள்ள கட்சிகள் தீவிரம் காட்டியுள்ளன.

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வார்டுகள் குறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பணிக்குழுவினர் திமுக நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றனர். மொத்தமுள்ள 100 வார்டுகளில் வெற்றி வாய்ப்புள்ள 25 வார்டுகளை அக்கட்சியினர் கேட்டுள்ளனர். ஆனால் திமுகவினர் 10க்கு கீழ் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில் 10 முதல் 15 வார்டு வரை கிடைக்கலாம் என, காங்கிரஸ் எதிர்பார்ப்படுகிறது. அமைச்சர்களுடன் நடக்கும் இறுதிக்கட்ட பேச்சுவார்த் தையை தொடர்ந்து இன்று அல்லது நாளை இறுதி முடிவு தெரியும். இருப்பினும், இம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியை குறி வைத்து கூடுதல் வார்டுகளில் களமிறங்க காங்கிரஸ் திட்டமிடுவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளில் நாங்களே பெரிய கட்சி என்றபோதிலும், தேசிய கட்சியாகவும் இருக்கிறோம். 12 மாநகராட்சிகளில் மதுரை முக்கியமானது. இங்கு திமுக, அதிமுக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி இருக்கும் நிலையில், 100 வார்டுகளில் எங்களுக்கென சில வார்டுகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். இதனடிப் படையில் 25 வார்டுகள் கேட்கிறோம். இது தொடர்பாக கட்சியின் தேர்தல் பணிக்குழு திமுக நிர்வாகி களுடன் பேச்சு நடத்துகின்றது.

குறைந்த பட்சம் 15 வார்டுகள் வரை எதிர்பார்க்கிறோம். கூடுதல் இடம் கிடைத்தால் நீண்ட காலமாக கட்சி பணியாற்றும் நிர் வாகிகளுக்கு வாய்ப்பளிக்க முடியும். ஏற்கனவே 12 மாநகராட்சியில் ஒரு சில மாநகராட்சியின் மேயர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என, கட்சி மேலிடம் வலியுறுத்துகிறது. இருப்பினும், மதுரையில் துணை மேயர் பதவியை பிரதான கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என, எங்களது மாநில நிர்வாகிகள் மூலம் திமுகவுக்கு அழுத்தம் கொடுப்போம். இதற்காக நகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகளை நகர்மன்ற உறுப்பினர்களாக திட்ட மிட்டுள்ளோம், என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE