’ சீட்’ கிடைத்தும் மருத்துவக் கனவு கேள்விகுறியான உசிலம்பட்டி மாணவி: கல்லூரி விடுதிக் கட்டணம் செலுத்த வருமானம் இல்லாமல் தந்தை தவிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை; மருத்துவம் படிக்க தனியர் கல்லூரியில் ‘சீட்’ கிடைத்தும், கல்லூரி விடுதிக் கட்டணம் செலுத்த வருமானம் இல்லாமல் உசிலம்பட்டி மாணவியின் மருத்துவராகும் கனவு கேள்விகுறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் அடுத்த பானா மூப்பன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்த மகள் தங்க பேச்சி. இவர் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று கலந்தாய்வில் தனியார் மருத்துவக்கல்லூரி இடம் கிடைத்தது. ஆனால், கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கல்வியை தொடர முடியவில்லை. அதன்பிறகு தாமதமாகதான் தமிழக அரசு கல்வி கட்டணத்தை ஏற்பதாக தெரிவித்தது. இதனால் தங்கபேச்சின் மருத்துவர் கனவு கடந்த ஆண்டு கலைந்துப் போனது.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தனியார் பயிற்சி வகுப்பிற்கு சென்று நீட் தேர்வு எழுதி 256 மதிப்பெண் பெற்று அரசு ஒதுக்கீட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அரசு கல்விக் கட்டணத்தை மட்டும் செலுத்தி விடுவதாக கூறியுள்ளது. ஆனால் தங்கும் விடுதி உட்பட இதர செலவினங்களை செலுத்துவதற்கு பேச்சியின் பெற்றோருக்கும் எந்த வருவாயும், பொருளாதார சூழ்நிலையும் இல்லாமல் உள்ளது.

அதனால், இந்த ஆண்டும் இந்த ஏழை மாணவியின் மருத்துவராகும் கனவு கலைந்துபோகுமா? என்று அவரது பெற்றோர் கவலையடைந்துள்ளனர். மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அது கிடைக்காமல் எத்தனையோ மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் தொடர்ந்து மருத்துவம் படிக்கப் போராடி வரும் மாணவி பேச்சியின் தொடர் முயற்சியும், மனஉறுதியும் பாராட்டத்தக்கது. இதனை தமிழக அரசு உணர வேண்டும்.

மாணவி தங்க பேச்சு கூறுகையில், ‘‘என்னை, எனது தந்தை சன்னாசி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்தான் வேலைக்கு அனுப்பாமல் பள்ளியில் படிக்க வைத்தார். நாங்கள் நான்கு பேர் பெண் குழந்தைகள். எங்களை படிக்க வைப்பது அடுத்தக் கட்டமாக திருமணம் செய்து கொடுப்பது என மிகப்பெரிய பொறுப்பும் எங்கள் பெற்றோருக்கு உள்ளது. அதனால், அவர்களால் என்னை தனியார் கல்லூரியில் விடுதி கட்டணம் உள்ளிட்ட இதர செலவினங்களை செலுத்தி படிக்க வைக்கும் சூழல் இல்லை.

சிறுவயது முதலே எனக்கு டாக்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அரசு மருத்துவக்கல்லூரியில் கிடைக்காதது வருத்தமாக உள்ளது. எனது தந்தையும் தாயும் கூலி வேலை செய்கின்றனர். நான் பள்ளிப்படிப்பு செல்லும்போதே காலையில் வயலில் வேலை செய்துவிட்டுதான் பள்ளி செல்வேன். விடுமுறை நாட்களில் அருகாமையில் உள்ள வயல்வெளிகளில் மல்லிகைப்பூ பறிக்கும் வேலை செய்வேன். அதில்தான் நோட்டுப் புத்தகங்களை வாங்கி படித்து வந்தேன். தற்போது மருத்துவ கல்லூரிக் கட்டணத்தை அரசு செலுத்துவிடும்.

விடுதிக் கட்டணம், நோட்டு, புத்தகங்களுக்காக தேவைப்படும் செலவை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. கடந்த ஆண்டே அதானல்தான் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை அரசு ஏற்றாலும் மற்ற செலவினங்களுக்கு என்ன செய்வது என்று செய்வதறியாது திகைத்து வருகிறோம். அரசு இதர செலவுகளையும் ஏற்க வேண்டும், ’’ என்றார்.

மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி பகுதியில் வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருக்கிறது. கடந்த காலங்களில் பெண் சிசுக்கொலை இப்பகுதியில் அதிகம் நடைபெற்றது. இந்த சூழலில் இப்பகுதியில் நான்கு பெண் குழந்தைகளையும் பேச்சியின் தந்தை சன்னாசி படிக்க வைத்து அவர்களுக்கான கல்வி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்க துடிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியக் குறிப்பு: கல்லூரி விடுதிக் கட்டணம் உள்ளிட்ட மாணவிக்குத் தேவையான அனைத்து செலவையும் அரசே ஏற்க முன்வந்துள்ளது. எனவே, இந்தச் செய்தியறிந்து உதவிக்கரம் நீட்ட முன்வந்த நம் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE