மதுரை மாநகராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் பட்டியல் தயார்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாநகர அதிமுக நிர்வாகிகள் கூறியதாவது:

மதுரை மாநகர அதிமுகவைப் பொறுத்தவரை, அதன் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இருக்கிறார். ஆனால், இவரது கட்டுப்பாட்டில் அனைத்து வார்டுகளும் வரவில்லை.

71 வார்டுகள் மட்டுமே இவரது மாநகர அதிமுக நிர்வாகத்தில் உள்ளது. மீதி 29 வார்டுகள் புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான வி.வி.ராஜன் செல்லப்பாவிடம் இருக்கிறது.

இரு மாவட்டச் செயலாளர்களும் தனித்தனியாக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து கட்சித் தலைமைக்கு அனுப்பி விட்டனர். அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவதற்காக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு வழங்கினர். அதில், பலருக்கு தற்போதே ‘சீட்’ இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடத் தயாராகிவிட்டனர். சிலர் திமுக பக்கம் செல்வதற்கு முடிவு செய்திருக்கின்றனர்.

வேட்பாளர் பட்டியல் வெளியானதும் ‘சீட்’ கிடைக்காத அதிருப்தியாளர்களை சரிக்கட்டுவதற்கு மாநகர் செயலாளர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாநகர செயலாளர் செல்லூர் கே.ராஜூவிடம் கேட்டபோது, ‘‘100 வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டோம். பாஜக சேர்ந்தால் அந்த வார்டுகளைத் தவிர மற்ற வார்டுகளுக்கு வேட் பாளர்களை கட்சித்தலைமை அறிவிக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE