அதிமுகவினரின் நலன் பாதிக்கப்படாத வகையில் பாஜகவுக்கு இடங்கள் ஒதுக்கீடு: ஜெயக்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாஜகவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், கட்சி நலன் மற்றும் தொண்டர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில், இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக பாஜக இடையே இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் அக்கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று பாஜகவினர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் நான்கரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். பிரதான கட்சி அதிமுக என்கிற முறையில், எந்தெந்த இடங்கள் கொடுப்பது என்பது குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளில் இறுதி செய்யப்படும். எங்களுடைய கட்சி நலன், தொண்டர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE