'இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு' - ஆளுநர் குறித்த முரசொலி கட்டுரை | அவதூறு என அண்ணாமலை ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: 'பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு என்பதை ஆளுநர் உணர்ந்திட வேண்டும்' என்று முரசொலியில் கட்டுரை வெளியான நிலையில், "அது அவதூறுதான்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களைப் பொறுத்தவரை வலுவான ஓர் எதிர்கட்சியாக அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும், ஆளுகின்ற திமுக அரசு செய்கின்ற அனைத்து தவறுகளையும், அதிமுக மக்கள் மன்றத்தில் வைத்து நிறைய கேள்விகள் கேட்டு, அதன்மூலம் திமுக தன்னை சரிபடுத்திக் கொள்வதற்காக ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக அதிமுக தலைமையில் அனைவரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறோம். அரசியலில் மிக நுணுக்கமாக செயல்படக்கூடிய கட்சிகளாகவும், ஆக்கபூர்வமான கட்சிகளாகவும் நாங்கள் இருக்கின்றோம்.

என்னைப் பொறுத்தவரை, முரசொலி பத்திரிகையில் தமிழக ஆளுநர் குறித்து எழுதியிருப்பது அவதூறுதான். கருத்து விமர்சனத்துக்கும், அவதூறுக்கும் நூலிழை வித்தியாசம் தான் உள்ளது. இன்றைக்கு அதை அவர்கள் தாண்டிவிட்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் என்பவர் மாநிலத்தின் ஒரு முக்கிய பொறுப்பு வகிப்பவர். அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை பேசக்கூடியவர். ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளை இதற்குமுன் பல மேடைகளில் பாராட்டியிருக்கிறார். குறிப்பாக கரோனா காலக்கட்டத்தில் செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் தமிழக அரசின் பணிகள் குறித்து பாராட்டியுள்ளார். அப்போதெல்லாம் முரசொலி இந்த ஆராய்ச்சிக்குள் போகவில்லை. எனவே இது அவதூறுதான், இதனை நடுநிலையாக இருக்கக்கூடிய எந்தவொரு சாமானியனும் கண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில், 'கொக்கென்று நினைத்தாரோ தமிழக ஆளுநர் ரவி' என்ற தலைப்பில் இன்று கட்டுரை வெளியானது. அதில், 'ஆர்.என். நாகலாந்து ஆளுநராக இருந்தபோது, அவரது அத்துமீறல்கள் அரசு மீது மட்டுமின்றி, ஊடகவியலாளர்கள் மீதும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள அவர், சில நேரங்களில் தனது அதிகார எல்லைகளை மீறி செயல்படுகின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது' என்று முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 'காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றபின் ஆளுநரான ஆர்.என்.ரவியின் மிரட்டல், உருட்டல் பாணிகள் அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும். ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு ஆதரவான கருத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்' என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், 'மற்ற இந்திய மாநிலங்கள் போல் அல்லாமல் தமிழ்நாடு அரசியலில் புடம்போட்ட மண் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இருமொழிக் கொள்கை, நீட் வேண்டாம் என்ற விவகாரங்களில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும்போது, ஆளுநர் ரவி அதனை உணர்ந்து ஒட்டுமொத்த தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

'ஆளுநர் எத்தகைய கருத்தை தெரிவிக்கும் முன்பும், தமிழ்நாட்டைப் புரிந்து கொண்டு, அதன் வரலாற்றை தெளிவாக தெரிந்துகொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை. பெரியண்ணன் மனப்பான்மையோடு செயல்பட இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு என்பதை ஆளுநர் உணர்ந்திட வேண்டும்' என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE