நியூகோவ் வைரஸ் | பொதுமக்களிடம் பதற்றத்தை உருவாக்க வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: நியூகோவ் என்கிற வைரஸ் குறித்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதுப்படுத்தப்பட்டு செய்திகள் வருகின்றன. இச்செய்திகளை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். பொதுமக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிலம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற 20-வது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: "தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி 20-வது மெகா மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற தொடங்கி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், ஊராட்சி பகுதிகளில் நடைபெறக்கூடிய தடுப்பூசி முகாம்கள் ஆய்வு செய்கிறோம். இன்று கோவிலம்பாக்கம் ஊராட்சியில் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 39 லட்சத்து 87 ஆயிரத்து 902 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் 18 வயதினருக்கும் மேல் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 5 கோடியே 20 லட்சத்து 29 ஆயிரத்து 899 பேர். அதாவது 89.88 சதவிகிதம் பேர், 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 3 கோடியே 90 லட்சத்து 21 ஆயிரத்து 718 பேர். அதாவது 67.41 சதவிகிதத்தினர் செலுத்தியுள்ளனர்.

முதல்வர் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதை தொடங்கி வைத்தார். இந்த வயதிற்குட்பட்ட 33 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது. இதுவரை பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 25 லட்சத்து 91 ஆயிரத்து 788 பேருக்கு, அதாவது 77.46 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதை முதல்வர் சென்னையில் இமேஜ் அரங்கத்தில் தொடங்கி வைத்தார். அதில் நேற்று வரை 4 லட்சத்து 48 ஆயிரத்து 394 பேர் பூஸ்டர் தவணை தடுப்பூசி 76.83 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். அவர்களில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 497 பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டு பணிகள் நிறைவுபெற்றிருக்கிறது. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டும், முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணிகள் இதுவரை 77 சதவிகிதத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டிருக்கிறது. 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் 97 லட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையே இலக்காகக் கொண்டு வாரந்தோறும் மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 12,525 ஊராட்சிகளில் முதல் தவணை 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 2,669 பேராக உயர்ந்திருக்கிறது. 24 நகராட்சிகளில் 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது மனநிறைவை தருகிறது. தமிழகம் முழுவதும் முதல் தவணை தடுப்பூசியை 90 சதவிகிதத்தினரும், 2வது தவணை தடுப்பூசியை 67 சதவிகிதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் எதிர்காலத்தில் எந்த விதமான வைரஸ் வந்தாலும் அதை தடுக்கக்கூடியதாக இருக்கும் என்று மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது ஏற்படக்கூடிய 95 சதவிகித உயிரிழப்புகள் தடுப்பூசி செலுத்தாதனாலும், இணை நோய் உள்ளவர்களும்தான் மரணத்தைத் தழுவுகிறார்கள். தடுப்பூசி ஒன்றுதான் நம்மைக் காக்கக்கூடிய ஒன்று. ஆகவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமணப் பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 19 லட்சத்து 21 ஆயிரத்து 519 பேருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 13 லட்சத்து 15 ஆயிரத்து 474 பேருக்கு வீடுதேடி சென்று சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உயர்ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட 9 லட்சத்து 71 ஆயிரத்து 990 பேருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. நோய் ஆதரவு சிகிச்சை சேவைகள் 1 லட்சத்து 71 ஆயிரத்து 68 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 27 ஆயிரத்து 851 பேருக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 47 லட்சத்து 09 ஆயிரத்து 66 பேர் இத்திட்டத்தில் முதல் முறையாக பயன்பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் 39 லட்சத்து 04 ஆயிரத்து 894 பேர். 86 லட்சம் பேருக்கு மருந்துப் பெட்டகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு பயன்பெற்றிருக்கிறார்கள்.

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கப்பட்டு 609 மருத்துவமனைகள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இச்சிறப்பு வாய்ந்த திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் குணமடைந்து முதல்வருடன் அச்சிறுவனுடன் உரையாடிய செய்தியை தொலைக்காட்சியில் கண்டோம். அதேப்போல் பொள்ளாச்சி கிரிக்கெட் வீரர் மோகன் விபத்தில் முகம் சிதைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று நலம் பெற்று, சிகிச்சை அளித்த மருத்துவருடன் செல்ஃபி எடுத்தனுப்பிய புகைப்படத்தை காணுகிற போது இத்திட்டத்தின் சிறப்பினை புரிந்துகொள்ளலாம். இத்திட்டத்தினால் 60-70 என்கிற அளவில் ஏற்பட்ட இறப்புகள் பாதிக்கும் மேல் குறைந்திருக்கிறது. மிக அற்புதமான இத்திட்டம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இத்திட்டத்தினால் இதுவரை பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் காக்கப்பட்டிருக்கிறது.

இதனால் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டால் உடனடியாக தொடர்புடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்று தங்களின் கடமைகளை ஆற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இப்போது சீனாவில் நியூகோவ் என்கிற வைரஸ் வவ்வாலால் ஏற்படுகிறது என்றும், இந்த வைரஸ் ஏற்பட்டால் 3 பேரில் ஒருவர் இறந்துவிடுவார் போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பெரிதுப்படுத்தப்பட்டு செய்திகள் வருகின்றன. இச்செய்திகளை உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டு அவர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இச்செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால் பொதுமக்களிடம் பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். இவற்றிற்கெல்லாம் ஒரே வழி தடுப்பூசி ஒன்றுதான்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இணை இயக்குநர் வினய், துணை இயக்குநர் பரணி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்