சென்னை: "அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் அண்மையில் அகில இந்திய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக ஒரு கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்தார். அது வரவேற்கக் கூடிய ஒன்று, அந்த நிலைப்பாட்டை விசிக சார்பில் வரவேற்று பாராட்டினோம். மிக சீரிய முயற்சி, அதுவும் சனாதன சக்திகள் கொட்டமடிக்கிற இந்த சூழலில், சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டிய தேவையை உணர்ந்து, முதல்வர் முன்னெடுத்திருக்கிற இந்த முயற்சி அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளாலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று, பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
அதேபோல், அரியலூர் மாணவி தற்கொலை பிரச்சினையில், மதவாத சக்திகள் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். அரசுக்கு எதிரான களங்கத்தை ஏற்படுத்துகிற வகையில் அவர்களது முயற்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் முன்வைத்தோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை ஒதுக்க வேண்டும்; பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது, விடுதலை சிறுத்தைகளுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றில் பெண்களுக்கு 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நிலைப்பாடு போற்றுதலுக்குரியது. இதற்கு சமூகத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பெண்களிடத்தில் மிகப்பெரிய அளவில் உற்சாகம் உருவாகியிருக்கிறது.
பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஏற்கெனவே மறைந்த முதல்வர் கருணாநிதி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கூட அந்தச் சட்டம் நடைமுறையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, தமிழகத்திலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று விசிக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தமிழ்த்தாய் பாடல் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடந்துகொண்ட போக்கு ஆணவத்தின் உச்சம். தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பது மரபு. அதை அறியாமல் அதிகாரிகள் ரிசர்வ் வங்கியில் பணியாற்ற வாய்ப்பு இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago