நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன: கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுமுதல் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் அகற்றின.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. வரும் 4-ம் தேதி மாலை 5 மணிவரை மனு தாக்கல் செய்யலாம்.

5-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப் படுகிறது. 7-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாகும். 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22-ம் தேதி வாக்குகள் எண்ணப் படுகின்றன.

வேட்பு மனு தாக்கலின் போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக் கப்படும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் அல்லது ஒரு முன் மொழிபவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் வேட்பாளர் உதவி மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசி யல் கட்சியினரின் சுவர் விளம் பரங்கள், சுவரொட்டிகளை அகற்றும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் நேற்று மேற்கொண்டன.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் முடிவுகள் வெளியாகி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும் வரை படைக்கலன்கள் எடுத்துச் செல்வதற்கு தடையாணை அமலுக்கு வந்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கலன் உரிமைதாரர்களும் தங்களது துப்பாக்கியை வரும் 3-ம் தேதிக்குள் தங்களது இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிய ஓப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் முடிவுகள் வெளியான தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு பின்னர் தமது பொறுப்பில் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE