'12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்' - தமிழகத்தில் புதிய மாவட்டங்களை உருவாக்க ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மாவட்டங்களை மறுசீரமைப்பு செய்து, புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும், இதில் இன்னமும் தாமதம் செய்யக் கூடாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 13 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு, புதிதாக மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆந்திராவில் மொத்தமுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் நலனுக்காகவும் அம்மாநில அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

நிர்வாக வசதிக்காக புதிய மாவட்டங்களை உருவாக்குவதில் ஆந்திரமும், தெலுங்கானமும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கின்றன என்றால் அது மிகையல்ல. 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, அம்மாநிலத்தில் மொத்தம் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அந்த மாவட்டங்கள் முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டு 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களின் எல்லை குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, ஏப்ரல் 2-ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டில் புதிய மாவட்டங்கள் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் ஆந்திரத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலுங்கானத்தில் தொடக்கத்தில் இருந்த 10 மாவட்டங்கள் முற்றிலுமாக மறு சீரமைக்கப்பட்டு, 33 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஆந்திரத்திலும், தெலுங்கானத்திலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் மாவட்ட மறுசீரமைப்பு நடவடிக்கை மனநிறைவு அளிக்கும் வகையில் இல்லை என்பது தான் உண்மை. தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் 40 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன. அதனால், தமிழகத்தின் மாவட்டங்களை மறுசீரமைத்து சராசரியாக 12 லட்சம் மக்களுக்கு ஒரு மாவட்டம் வீதம் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வின் வலியுறுத்தலை ஏற்று முந்தைய அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் இவை போதுமானவை அல்ல.

ஆந்திர மாநிலத்தில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 18.99 லட்சம். தெலுங்கானத்தில் ஒரு மாவட்டத்தின் சராசரி மக்கள்தொகை 10.60 லட்சம் மட்டும் தான். ஆனால், தமிழக மாவட்டங்களின் சராசரி மக்கள்தொகை 20 லட்சத்திற்கும் அதிகமாகும். இது தெலுங்கானத்துடன் ஒப்பிடும் போது இது இருமடங்கு ஆகும். அதுமட்டுமல்ல... தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் 25 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 8 ஆகும். திருவள்ளூர், சேலம், கோவை ஆகிய மாவட்டங்களின் மக்கள்தொகை தலா 35 லட்சத்துக்கும் அதிகம். இம்மாவட்டங்கள் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் 103 நாடுகளை விட அதிகம் ஆகும். இப்படிப்பட்ட சூழலில் இந்த மாவட்டங்களில் வளர்ச்சியும், முன்னேற்றமும் எவ்வாறு சாத்தியமாகும்? இதை தமிழக அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பல சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லைகள் இரு மாவட்டங்களில் பரவிக் கிடப்பதால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. இவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 5 ஆம் தேதி ஆளுனர் உரையில் ஏமாற்றமே மிஞ்சியது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்; எல்லைகளை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 8 ஆம் தேதி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதி குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருந்தடையாக இருக்கும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஆந்திரத்திலும், தெலுங்கானத்திலும் செய்யப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்