எத்தனை காலம்தான் சினிமா துறையினர் ஆள்வார்கள்?- அன்புமணி ஆதங்கம்

இன்னும் எத்தனை காலம் சினிமா துறையை சார்ந்தவர்கள் ஆண்டுகொண்டிருப்பார்கள்? சினிமா துறையை சார்ந்தவர்களுக்குதான் அறிவு அதிகமா? என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் ஊர் உங்கள் அன்புமணி என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்ட மக்களுடன் மருத்துவர் அன்புமணி கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"2ஜி என்று சொன்னால் உலக அளவில் எல்லோருக்கும் தெரியும். உலக அளவில் கொடூரமான தலைவர் என்றால் ஹிட்லரின் பெயரைச் சொல்வார்கள். அமெரிக்காவில் போய் உலக அளவில் பெரிய ஊழல் எது என்று கேட்டால் 2ஜி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட ஊழல் செய்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கு சகிப்புத்தன்மை அதிகம். எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்கள்.

ஒரு மாற்றத்தை கொண்டுவாருங்கள். திராவிடக் கட்சிகளுக்கு 50 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த அன்புமணிக்கு 5 ஆண்டு காலம் மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். எனக்கு அதற்கு மேல் வேண்டாம். 60 மாதங்கள் எனக்குப் போதும். இவர்கள் 50 ஆண்டுகள் செய்யாததை 5 ஆண்டுகளில் செய்து முடிப்பேன். என்னாஅல் முடியும். இதை ஆணவத்தில் சொல்லவில்லை. நம்பிக்கையில் சொல்கிறேன்.

நான் மத்திய அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 110 கோடி மக்களின் சுகாதார சீர்கேடுகளை ஒழித்துள்ளேன். தமிழ்நாட்டில் ஏழே முக்கால் கோடி மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவேன்.

இன்னும் எத்தனை காலம் சினிமா துறையை சார்ந்தவர்கள் ஆண்டுகொண்டிருப்பார்கள்? சினிமா துறையை சார்ந்தவர்களுக்குதான் அறிவு அதிகமா? ஆற்றல் அதிகமா? நிர்வாக திறமை அதிகமா? ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு பேராசிரியர், ஒரு படித்தவர் முதல்வராக வரக் கூடாதா? ஏன் இந்த விதிவிலக்கு?

ஜெயலலிதாவிடம் விவசாயத்தைப் பற்றி ஒரு கேள்வி கேளுங்கள். அதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா?

கருணாநிதியிடம் வசனம் எழுதுவதைப் பற்றி கேட்டால் சொல்வார். விஜயகாந்திடம் கேட்டால் ஒன்றும் சொல்லமாட்டார். அவர்களுக்கு விவசாயம் பற்றி தெரியாது.

தமிழ்நாட்டில் உள்ள 70% மக்கள் விவசாயிகள். ஆனால், விவசாயிகள் ஏன் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு வாக்களிக்கிறீர்கள்?

நான் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன். விவசாயிகள் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு தர முடியும்."

இவ்வாறு அன்புமணி பேசினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்று கூறுவது கருத்து திணிப்பு. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது'' என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE