கோயில் நிகழ்ச்சிகளில் நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வேண்டும்: பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள ஏ.கே.சி.நடராஜன் வேண்டுகோள்

By ஜெ.ஞானசேகர்

திருச்சி: குடமுழுக்கு உள்ளிட்ட கோயில் நிகழ்ச்சிகளில் நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருதுக்கு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி.நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது 90-வது வயதில்தான் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் குறித்து, “இந்து தமிழ் திசை” நாளிதழிடம் அவர் கூறியது:

”எனது 10-வது வயதில் இருந்து இசை பயின்று வருகிறேன். ஆலத்தூர் வெங்கடேச அய்யரிடம் வாய்ப்பாட்டும், இலுப்பூர் நடேச பிள்ளை மற்றும் எனது தந்தை சின்னிகிருஷ்ண நாயுடுவிடம் நாதஸ்வரமும் பயின்றேன்.

இசை உலகில் நாதஸ்வரத்தில் மாபெரும் மேதைகள் இருந்ததால், தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கில் பின்னர், கிளாரினெட் இசைக் கருவியைத் தேர்வு செய்தேன். பல ஆண்டு கால உழைப்பின் பலனாக இப்போது எனக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

90-வது வயதில் எனக்கு இந்த அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது இறைவனின் திட்டம். எனவே, எனக்கு இப்போது கிடைத்துள்ளது. பிற துறைகளைப்போல் கலைத் துறையும் சவால் மிகுந்ததுதான். அடிபட்டு, அனுபவப்பட்டால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். அந்த வகையில் கடுமையாக உழைத்த என்னை இந்த நிலைக்கு உயர்த்திய இறைவனுக்கும், ஆதரவு அளித்த மக்களுக்கும், விருதுக்கு தேர்வு செய்த மத்திய அரசுக்கும், தேர்வுக் குழுவுக்கும் மற்றும் எனக்கு பல்வேறு வகைகளில் உதவிய மாநில அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வருக்கு வேண்டுகோள்..

கோயில்களைத் தவிர சபாக்களில் தற்போது நாதஸ்வர நிகழ்ச்சி நிகழ்த்தப்படுவதில்லை. திருமணங்களிலும் வெகுவாக குறைந்துவிட்டது. எனவே, குடமுழுக்கு உள்ளிட்ட கோயில் நிகழ்ச்சிகள் அனைத்திலும் 2 அல்லது 3 நாதஸ்வர குழுக்களை வரவழைத்து நாதஸ்வரம் இசைக்கச வேண்டும். இதன்மூலம் நலிந்த நிலையில் உள்ள நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வருவாய் கிடைத்து மகிழ்ச்சி அடைவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

நாட்டுப் பற்று..

கிளாரினெட் இசை உலகில் நான் வளர்ந்திருந்த நிலையில், நான் தொடக்கக் காலத்தில் பணியாற்றிய கோயில் நிர்வாகத்தினர் 36 பவுன் தங்கத்தால் செய்யப்பட்ட கிளாரினெட் இசைக் கருவியை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

1958-ம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் எம்ஜிஆர், என்எஸ்கே, ஏ.பி.நாகராஜன், சிவாஜி கணேசன் ஆகியோர் அதை எனக்கு வழங்கினர். பின்னாளில், சீனாவுடன் போர் நடைபெற்றபோது, அப்போதைய முதல்வர் பக்தவத்சலத்திடம் அந்த தங்கத்தால் ஆன கிளாரினெட்டை போர் நிதியில் சேர்க்குமாறு வழங்கிவிட்டேன்.

என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE