ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு | திமுகவின் தொடர் போராட்டத்தால் சமூக நீதிக்கான வெற்றி: ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு என்பது பல்வேறு போராட்டங்களின் மூலமே சாத்தியமானது என்று தேசிய இணையக் கருத்தரங்கில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவிலான 'சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்' கருத்தரங்கு காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்நிகழ்வை IBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. இந்தக் கருத்தரங்கிற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீரேந்திர சிங் யாதவ், பிஹார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ் வி. யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தலைவர் (அமெரிக்கா) டாக்டர் ஹரி எப்பனபள்ளி, AIBF ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளர் நீதியரசர் வி. ஈஸ்வரய்யா ஆகியோர் கலந்துகொண்டு, மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியதில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த முயற்சிகளைப் பாராட்டி உரையாற்றினர்.

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய தலைமை உரை: "வரலாற்று சிறப்புமிக்க நாள் இது! சமூக நீதி வரலாற்றிலே பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் இந்த நாள்! சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட ஒரு அகில இந்தியா கூட்டமாக இந்தக் கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய திராவிடர் கழகத் தலைவர் இங்கே பேசுகிறபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். திராவிட இயக்கம் பாராட்டை எதிர்பார்க்கவில்லை, இது திராவிட இயக்கத்தின் கடமை என்று சொன்னார். அதை நானும் வழிமொழிவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

இதனைப் பாராட்டு விழாவாக நான் கருதாமல், அடுத்தக்கட்ட சமூக நீதி உரிமையை பாதுகாக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைக் கூட்டமாகவே நான் இதைக் கருதுகிறேன். காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடந்தாலும், கண்கொள்ளாக் காட்சியாக இது அமைந்திருக்கிறது. இப்போது என் வருத்தம் எல்லாம், இதைக் காண்பதற்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் இல்லையே என்பது மட்டும்தான் வருத்தமாக இருக்கிறது. இந்தியா முழுவதும் சமூக நீதி பேரியக்கம் பரவ வேண்டும் என்று அவர்கள் மூவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்கள். அந்த உழைப்பு வீண் போகவில்லை. இந்திய வரைப்படத்தின் கிழக்கும், மேற்கும், வடக்கும், தெற்கும் என பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் இந்த காணொலி வாயிலாக இன்றைக்கு இணைந்திருக்கிறோம். சரியாக சொல்ல வேண்டுமென்று சொன்னால், நம்மையெல்லாம் இணைத்தது சமூக நீதி என்ற கருத்தியல் தான்.

திராவிட இயக்கம் போட்ட விதை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் முளைக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் அறுவடையைத் தான் இப்போது நாம் பார்க்கிறோம். அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு SRA, PAGAAM, BAMCEF, We the people மற்றும் LEAD India ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கக்கூடிய சமூக நீதி நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அதிகப்படியான அளவிற்கு என்னைப் பாராட்டி பேசியிருக்கிறீர்கள். இந்தப் பாராட்டுக்கள், புகழுரைகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன். தொண்டர்களின் பலத்தால் அவர்கள் நித்தமும் அளித்து வரக்கூடிய ஊக்கத்தால் தான் இந்த எளியேனால் இத்தகைய சாதனைகளுக்கு முடிந்த அளவு பங்களிப்பு செலுத்த முடிகிறது.

தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக, சமூக நீதிக்கான வெற்றியை அடைந்துள்ளோம். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை அனைத்து இந்திய மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றிருப்பதன் மூலமாக, சமூக நீதி வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனை என்பது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவையிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் மூலம் இந்தச் சாதனையை நாம் பெற்றிருக்கிறோம். இந்தப் போராட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான பங்களிப்பை செய்துள்ளது என்பதை தலை நிமிர்ந்து சொல்வதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

சமூக நீதி என்பது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குக் கொடுத்த மிக முக்கியமான கொடையாகும். சமூக நீதி என்பது அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாகும். அனைத்து சமூகத்திற்குமான இட ஒதுக்கீட்டை 1921ஆம் ஆண்டு வழங்கியது நீதிக் கட்சியின் ஆட்சி. இந்த இட ஒதுக்கீட்டிற்கு, அதனுடைய முறைக்கு உச்சநீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது கடுமையாக போராடி 1950ஆம் ஆண்டு அரசியல் சட்டத் திருத்தத்தை செய்ய வைத்தவர்கள் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந்தலைவர் காமராஜரும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை 31 விழுக்காடாக ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம். பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 விழுக்காடாக ஆக்கியதும் திமுக தான். இந்த 18 விழுக்காடில் பழங்குடியினரும் இருந்தார்கள். அவர்களுக்கு தனியாக 1 விழுக்காடு வழங்கி, முழுமையாக 18 விழுக்காடும் பட்டியலினத்தவர்களுக்கு கிடைக்க வழி செய்து இன்றைய 69 விழுக்காடை கொண்டுவந்தது திமுக.

மதம் மாறிய ஆதி திராவிட கிறிஸ்துவர்களையும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் திமுக தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 விழுக்காடாக பிரித்து, மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனப் பெயரிட்டு ஒதுக்கீடு வழங்கியது திமுக. அருந்ததியினர்க்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, ஒன்றிய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பிரதமர் வி.பி.சிங் மூலமாக வலியுறுத்தி அதையும் பெற்றோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றியது திமுக. இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். சமூக நீதி கருத்தியலுக்கு செய்த மாபெரும் பங்களிப்பாகும்.

இதனுடைய தொடர்ச்சியாக, 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளில் வழங்க வலியுறுத்தி போராடினோம், இப்போது பெற்றுத் தந்திருக்கிறோம். அகில இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மத்திய ஆட்சியாளர்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லி வந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் எப்போதும் இடம்பெறும் கொள்கையாக அது அமைந்திருந்தது.

2019ஆம் ஆண்டு முதல் இதற்கான முனைப்புகளை அதிகமாக எடுத்தோம். நம்முடைய கழகத்தின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர், மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் தன்னுடைய சொந்த வழக்கைப் போல இதனை அவர் நடத்தினார். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், அவரை வழக்கறிஞர் என்று சொல்வதைவிட சமூக நீதிப் போராளியாகவே இதில் அவர் செயல்பட்டார். MBBS, OBC இடஒதுக்கீடு குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுமாறு 2019ஆம் ஆண்டு பிரதமருக்கு நான் கோரிக்கை வைத்தேன். நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் இது குறித்து கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நமது கழக எம்.பி வில்சன் அவர்கள் நேரடியாக சந்தித்து கடிதமும் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், மத்திய அரசு சரியான பதிலைச் சொல்லாத காரணத்தால், நான் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தேன். இவர்களிடம் சும்மா கேட்டால் கிடைக்காது என்ற காரணத்தால் தான் 2020ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கை தாக்கல் செய்தோம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினோம். திமுக தொடுத்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் போடச் சொன்னார்கள். அப்போதும் ஒன்றிய அரசு மனம் இரங்கவில்லை. சலோனி குமாரி வழக்கை காரணமாக காட்டினார்கள். அந்த வழக்கு முடிந்தால்தான் முடிவெடுக்க முடியும் என்று சாக்கு போக்கு சொன்னார்கள். தி.மு.க. போட்ட வழக்கு வேறு - சலோனி குமாரி வழக்கு வேறு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங்கியாக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2021-2022ஆம் ஆண்டிலிருந்து வழங்க வேண்டும் என்று உத்தரவும் போட்டது. இதுதான் மிகப்பெரிய வெற்றியாகும். ஆனாலும், இதனை மத்திய அரசு வழங்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. முறையாக செயல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 26.7.2021 அன்றுதான் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்குவதாகச் சொல்லி உறுதியளிக்கிறார். ஏதோ பா.ஜ.க. அரசுதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு உரிமை தூக்கிக் கொடுத்ததைப் போல சிலர் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடந்த உண்மை எதுவும் தெரியாது. 2020-ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது.

2021-ஆம் ஆண்டு சூலை மாதம்தான் பாஜக. அரசு இதனை ஒப்புக் கொண்டது. இந்த உண்மைகளை அவர்கள் மறக்கலாம். ஆனால் மறைக்க முடியாது. இது ஏதோ ஒரு வழக்கின் வெற்றி அல்ல. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தின் வெற்றி ஆகும். இதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. சமூக நீதி என்பது சமூக சமத்துவம் ஆகும். அது கல்வியில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் உருவாக்கப்பட வேண்டும். ''எங்கெல்லாம் அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட வேண்டும்'' என்று உலகப் பொருளாதார மேதை அமர்த்தியா சென் சொல்லியிருக்கிறார். அத்தகைய நீதியை உருவாக்கவே திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ரத்த பேதம் இல்லை - பால்பேதம் இல்லை என்பதே திராவிட இயக்கத்தின் அடிப்படை இலட்சியம் ஆகும். சமூகநீதியும் - பெண்ணுரிமையும்தான் தலையாய லட்சியம் ஆகும். இந்த மகத்தான கொள்கையைத் தமிழத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் பணியை நாங்கள் தொடங்க இருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்