அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக் குளறுபடிகளை நீக்குக: டெல்டா விவசாயிகள் கோரிக்கை

By க.ரமேஷ்

கடலூர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் உள்ள குளறுபடிகள் நீக்க வேண்டும் என்று முதல்வருக்கு காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

''காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு உடனடியாக ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற உத்தரவை ரத்து செய்து பழைய நடைமுறையே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டிற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதில் பல்வேறு குளறுபடிகள் காரணத்தால், வெளிச்சந்தையில் விவசாயிகள் 63 கிலோ சன்ன ரகத்திற்கு ரூ.1050க்கு விற்பனை செய்து வருகிறார்கள். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 40 கிலோ சன்ன ரகத்திற்கு ரூ 836 அரசு அறிவித்தாலும், கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று ஆன்லைன் பதிவு செய்து பிறகு மீண்டும் கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி பெற்று நெல் கொள்முதல் நிலையத்தில் அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றால் தான் நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

இதனால் வெளிச்சந்தை வியாபாரிகளுக்கும், இடைத் தரகர்களுக்கும் அடிமாட்டு ரேட்டுக்கு நெல்லை விற்பனை செய்யும் அவலநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இதில் விவசாயிகள் மட்டுமல்லாமல் குத்தகை சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலை காவிரி டெல்டா பகுதி முழுவதும் நீடிக்கிறது எனவே எந்த நிபந்தனையுமின்றி கடந்த ஆண்டுபோல அடங்களை மட்டும் பெற்று, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நேரடியாக நெல்லை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். இதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவதோடு, விலை வீழ்ச்சிக்கும் இது வழிவகுக்கும். எனவே தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்'' இவ்வாறு கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE