பத்ம விருது | கிராமாலயா முன்னெடுத்த திட்டங்களை வெற்றியடையச் செய்த மக்களையே சேரும்: தாமோதரன் நெகிழ்ச்சி

By ஜெ.ஞானசேகர்

திருச்சி: மத்திய அரசின் பத்ம விருது அங்கீகாரம், கிராமாலயா முன்னெடுத்த திட்டங்களை வெற்றியடையச் செய்த மக்களையுமே சேரும் என சிறந்த சமூகப் பணிக்கான பிரிவில் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள தாமோதரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் தாமோதரன். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், "அந்தியோதயா" என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 3 ஆண்டுகள் கள அனுபவத்துக்குப் பிறகு 1987ல் தனது நண்பர்களுடன் இணைந்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில், பத்ம ஸ்ரீ விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து "இந்து தமிழ் திசை" நாளிதழ் நிருபருக்கு அவர் அளித்த பிரத்தியேக சந்திப்பில் கூறியது:

"மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு, எனது நண்பர்கள் செரீப், மோகன் ஆகியோடன் இணைந்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கான விதை, கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தில் இணைந்து பணியாற்றியபோது எனது மனதில் பதிந்தது.

கிராமாலயா-வின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான தனி நபர் கழிப்பிடங்களை கிராமாலயா கட்டியுள்ளது. நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் சுகாதார நலக் கல்வி குழுக்களை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார கழிப்பிட வளாகங்களை கட்டணக் கழிப்பிடங்களாக பராமரிக்கவும் பயிற்சி அளித்துள்ளோம்.

கிராமாலயாவின் தொடர் விழிப்புணர்வு சேவை காரணமாக நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட நகர்ப்புற குடிசைப் பகுதியாக 2002ல் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்மந்தை பகுதியும், நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமமாக 2003ல் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் ஆராய்ச்சி ஊராட்சிக்குட்பட்ட தாண்டவம்பட்டியும் அறிவிக்கப்பட்டன.

இந்த இரு நிகழ்வுகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியன திறந்தவெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க முன்னுதாரணமாக அமைந்தன.

கிராமாலயாவின் தொடர் சுகாதார சேவைகளுக்காக எனக்கு 2017ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "டாய்லெட் டைடடன்" என்ற விருதை வழங்கினார். இந்த நிலையில், மத்திய அரசு இப்போது பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதுடன், அதிக ஊக்கத்தைத் தந்துள்ளது. இதை எனது 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், திருச்சி மண்ணுக்கு கிடைத்த பெருமையாகவும் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களையும், கிராமாலயா முன்னெடுத்த ஒவ்வொரு திட்டங்களை முழு ஒத்துழைப்பு அளித்து வெற்றியடையச் செய்த மக்களையுமே சேரும்"

என தாமோதரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE