தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை இந்தியா தடுக்க வேண்டும்: வைகோ

By செய்திப்பிரிவு

சென்னை: "எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு கண்டனத்திற்குரியது" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் அவர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்துவதும், படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளைக் கைப்பற்றி வருவதும், மீனவர்களைக் கைது செய்து கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. மத்திய பாஜக அரசு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் பாராமுகமாக இருப்பதும் இலங்கை ஆட்சியாளர்களுடன் கைகுலுக்குவதும் இலங்கை இனவெறி அரசுக்கு மென்மேலும் துணிச்சலைக் கொடுத்துள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கைக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், உயிர்ப் பலி ஆனாலும் மத்திய அரசு இலங்கை அரசைப் பெயரளவுக்குக் கூட கண்டிப்பது இல்லை. எனவேதான் இலங்கை அரசின் அட்டூழியங்கள் நிற்கவில்லை.கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 121 படகுகள் இலங்கைத் துறைமுகங்களில் 5 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுக் கிடந்ததால் அவற்றை அழித்து விடுமாறு இலங்கை நீதிமன்றங்கள் உத்திரவிட்டன. அவற்றை மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15.12.2020 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். ஆனால், மத்திய பாஜக அரசு அப்போதும் மிக அலட்சியமாக இருந்தது.

தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன் இலங்கை அரசு தனது கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி எல்லைத் தாண்டி மீன் பிடிக்க வரும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.60 லட்சம் முதல் ரூ.1.75 கோடி வரை அபராதம் விதிக்கவும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கிறது. இலங்கை அரசின் இச்சட்டம் தமிழக மீனவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தமிழக மீனவர்களைக் குறிவைத்து இலங்கை அரசு கொண்டு வரும் இக்கொடிய சட்டத்தைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி 2016, டிசம்பர் 15ம் தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

அதன்பின்னர் 2017, மே 11-இல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது அந்நாட்டு அரசிடம் இலங்கைக் கடற்தொழில் சட்டம் குறித்து நமது மீனவர்களின் கவலையைத் தெரிவிக்கவில்லை.இந்திய அரசின் இத்தகைய அலட்சியப் போக்குதான் தற்போது 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை பிப்ரவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. இலங்கை அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது.

உடனடியாக மத்திய பாஜக அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் ஏலம் விடப்படுவதைத் தடுக்க வேண்டும்; இலங்கை அரசின் பிடியிலிருந்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்துப் படகுகளையும் மீட்க வேண்டும்; இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கும் 56 மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்