அரியலூர் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? - கமல்ஹாசன் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: "கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? அரியலூர் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?" என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த அரியலூர் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழக மக்களிடமும், தமிழக அரசியலிலும் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பள்ளி மாணவியின் மரணத்திற்குக் காரணம் கட்டாய மதமாற்றம் என்று மாணவியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருப்பதாக ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவி மரணப்படுக்கையில் அளித்த வீடியோ வாக்கு மூலத்திலும் அப்படித்தான் கூறுகிறார் என்கிறார்கள்.

மற்றொரு தரப்போ விடுதியின் கணக்குவழக்குகளைப் பார்க்கச் சொல்லி கூடுதலாக வேலைவாங்கியதாகவும், விடுதி அறைகளை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய பணித்ததுமே காரணம் என்றும் சொல்கிறார்கள். இவற்றுள் எது காரணம் என்றாலும் அது ஏற்புடையதல்ல. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான். மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல.

சேரன்மாதேவி குருகுலப்பள்ளியில் அந்தண மாணவர்களுக்கும், அந்தணர் அல்லாத பிற மாணவர்களுக்கும் இடையே பாகுபாடுகள் காட்டப்பட்டதை வன்மையாகக் கண்டித்த தந்தை பெரியார், அப்பள்ளிக்கு காங்கிரஸ் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்த வேண்டும் என்றார். பள்ளியில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்ததைக் கண்டித்து காங்கிரஸிலிருந்து வெளியேறி ‘சுய மரியாதை இயக்கத்தை’ தொடங்கினார். இது நடந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் இக்கொடுமைகளுக்கு ஒரு விடிவு வந்த பாடில்லை. பல ஆண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்ட சிறுமி பள்ளியில் இருந்த பானையில் தண்ணீர் குடித்தாள் என்பதற்காக ஆசிரியர் அடித்ததில் கண்பார்வையை இழந்த கட்டநாயகன்பட்டி தனம் இன்னமும் என் நெஞ்சை விட்டு அகலாத ஒரு துயரம்.

படிக்க வரும் குழந்தைகள் இதுபோன்ற சில காட்டுமிராண்டித்தனமான ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது அன்றாடம் நடக்கிறதென தெரிந்தும் இத்தகைய அத்துமீறல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்த உயரதிகாரிகளும், மாநில அரசுமே குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள்.

வசதி படைத்த மாணவர்கள் பயிலும் ஒரு தனியார் பள்ளியில் இதுபோன்ற அத்துமீறல்கள் நிகழுமெனில் பெற்றோர் தரப்பில் மிகப்பெரிய கொந்தளிப்பும் எதிர்வினையும் நிகழும். ஆனால், ஏழை எளிய கீழ்மத்திய வர்க்க குடும்பங்களின் பிள்ளைகள் பயிலும் அரசுப் பள்ளிகள், அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைத் தங்களது ஏவல்காரர்கள் போல நடத்தும் மனப்போக்கு சில ஆசிரியர்களிடம் அதிகரித்து வருகிறது. பள்ளிக்கூடங்களை சரிபார்க்க வேண்டிய கல்வித்துறை உயரதிகாரிகள், பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்களது கடமையில் இருந்து தவறியதன் விளைவுகளே நாம் அன்றாடம் அதிர்ச்சியுடன் எதிர்கொள்ளும் இதுபோன்ற துர்சம்பவங்களுக்கான காரணிகள்.

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? அரியலூர் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?

அரியலூர் மாணவியின் தற்கொலைக்கான உண்மையான காரணம் நேர்மையான துரிதமான விசாரணையின் மூலமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நமது கண்மணிகளைக் காக்க நாம் என்னென்ன முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளப் போகிறோம் என்பதை யோசித்து ஆக்கபூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்