தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் மத்திய அமைச்சரின் வருத்தமும், முதல்வரின் பதிலும் அதிர்ச்சி அளிக்கிறது: ஓபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவிப்பதும், ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் பதிலளிப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியத் திருநாட்டிலுள்ள மாநிலங்களின் தலை நகரங்கள், முக்கியத் துறைமுகங்கள், பெரிய தொழிற்சாலைகள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை இணைக்கும் பணியினையும், அதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு குறைந்த நேரத்தில் பயணிக்கவும் தேசிய நெடுஞ்சாலைகள் உதவுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாட்டுப் பணி, விரிவுபடுத்தும் பணி, பராமரிப்புப் பணி போன்றவை மத்திய அரசின் நிதி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பணிகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் தெரிவிப்பதும், ஒத்துழைப்பு தருவதாக முதல்வர் பதிலளிப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அண்மையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், தமிழகத்தில் எந்தெந்தவிதமான சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான ஒட்டுமொத்த திட்டங்கள் கூட தரப்படுவதில்லை என்றும், தமிழ்நாடு அரசின் அனுமதி பெறுவது என்பது மிகக் கடினமாக இருப்பதாகவும், இவையெல்லாம் அதிகாரிகள் மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய ஒன்று என்றும், அதிகாரிகள் அது குறித்து முடிவு எடுத்து தெரிவிக்காததன் காரணமாக அந்தப் பணிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளன என்றும், இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்ததோடு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்பட்சத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அனைத்துச் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் பல்வேறு சாலைப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், கேரள மாநிலத்தின் முதல்வர் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கான சாதகமான முடிவுகளை உறுதியாக எடுப்பது மத்திய அரசுக்கு உதவிகரமாக இருப்பதாகவும், இது கேரள மாநிலத்திற்கு நிறைய திட்டங்கள் கிடைக்க வழிவகுத்துள்ளது என்றும் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் இந்த அளவுக்கு வருத்தப்பட்டு சொல்வதைப் பார்க்கும்போது, திமுக அரசு விழிப்புடன் செயல்படவில்லையோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுகின்றது. தமிழகத்தின் வளர்ச்சி என்பது மாநில அரசின் நிதி, மத்திய அரசின் வரிப் பகிர்வு, மத்திய அரசின் நிதியுதவி, வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் அனைத்தையும் உள்ளடக்கியது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசிடமிருந்து அதிக நிதியைப் பெற்று தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நன்மை பயப்பதாகும். அரசியலை புறந்தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதால்தான், பல்வேறு சாலை வசதிகள், சுகாதாரத் திட்டங்கள், ஒரேயாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல்வேறு திட்டங்கள் தீட்டிச் செயல்படுத்தப்பட்டன. இதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு. அதைவிடுத்து, தமிழ்நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களில், தமிழக மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் ஒத்துழைப்பு அளிக்காமல் இருப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு செய்தால், தமிழ்நாட்டிற்காக ஒதுக்கப்படுகின்ற நிதி மற்ற மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை, கட்டமைப்புகளை பின்னோக்கித் தள்ளுவதற்குச் சமம்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று கூறியிருக்கிறார். இது ஓரளவுக்கு ஆறுதலை அளிக்கிறது என்றாலும், இதுபோன்ற விமர்சனங்கள் வருவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறதா என்பதை அவ்வப்போது கண்காணித்து தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அதிமுக சார்பில் முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்