ஆன்லைன் வகுப்பே இல்லாதபோது தவறு நடக்க வாய்ப்பு இல்லை; பாலியல் புகாருக்கு ஆளான தனியார் பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை விடுவிக்க உத்தரவு: குண்டர் சட்டத்தில் கைது செய்ததையும் ரத்து செய்தது நீதிமன்றம்

புகார் கூறப்பட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் வகுப்பே நடக்காதபோது சென்னை கே.கே.நகர்தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் எப்படி பாலியல் ரீதியாகதவறாக நடந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், அவர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-16 காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவி ஒருவருக்கு ஆன்லைன் வகுப்பின்போது பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலனை (59)அசோக் நகர் போலீஸார் கடந்தஆண்டு மே 25-ம் தேதி போக்ஸோசட்டத்தில் கைது செய்தனர். கடந்த ஆண்டு ஜூன் 24-ம் தேதி குண்டர்சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து ராஜகோபாலனின் மனைவி ஆர்.சுதா சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அமர்வில் இந்தவழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் சுந்தர் மோகன், எம்.சுரேஷ் ஆகியோரும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜூம் ஆஜராகி வாதிட்டனர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு: கரோனா காலகட்டம் என்பதால்2020-21-ல் இருந்துதான் ஆன்லைனில் வகுப்பு நடந்து வருகிறது.2015-16-ல் ஆன்லைன் வகுப்புகளே நடக்காதபோது எப்படி ஆசிரியர் பாலியல் ரீதியாக தவறாகநடந்திருக்க முடியும் என்ற மனுதாரர் தரப்பு வாதம் ஏற்கத்தக்கது.

மேலும், அவருக்கு எதிராக குற்றம்சாட்டி பிரமாண வாக்குமூலம் அளித்துள்ள மேலும் 4 மாணவர்களும் 21 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் யாருமே 2020-21காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவில்லை. இந்த சூழலில் ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கூறப்படும் குற்றச்சாட்டு ஏற்புடையதாக இல்லை.

மேலும், இந்த உத்தரவை அதிகாரிகள் முழு மனதை செலுத்திபிறப்பிக்கவி்ல்லை. குண்டர் சட்டஉத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியும் ஜூன் 24 என்பதற்கு பதிலாகஜூன் 28 என திருத்தப்பட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கான காரணங்களை குறித்த காலத்தில் ராஜகோபாலனுக்கு வழங்கவில்லை. எனவே, அவர் மீதான குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்கிறோம். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE