அரசு கல்லூரி, பல்கலை. பேராசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்கவேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கல்லூரி, பல்கலைகழகப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் வரும் ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவது எந்த வகையிலும் நியாயமல்ல.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், எந்த பல்கலைக்கழகத்திலும், கல்லூரிகளிலும் கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் 6000-க்கும் கூடுதலான ஆசிரியர்களும் பதவி உயர்வு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கூட, அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

தமிழக அரசின் நிதி நெருக்கடி தான் ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கான காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்தக் காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கு மட்டும் பதவி உயர்வையும், தர ஊதிய உயர்வையும் வழங்க மறுப்பது நியாயம் அல்ல. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதற்கு நிதி நெருக்கடியைக் கடந்து நடைமுறைச் சிக்கல்களும் முக்கியக் காரணம் ஆகும். பிற அரசுத்துறையினருக்கு காலம் சார்ந்து தானாக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை தங்களின் செயல்பாட்டு சாதனைகளுடன் விண்ணப்பித்து அதனடிப்படையில் தான் பெற முடியும். இந்நடைமுறை பணி மேம்பாட்டுத் திட்டம் (Career Advancement Scheme) என்றழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவது அவர்களின் பணி நிலையையும், ஊதியத்தையும், பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்தையும் கடுமையாக பாதிக்கும். கடந்த 3 முதல் 5 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, படிநிலை சார்ந்த பதவி உயர்வு என்பது கவுரவம் சார்ந்த விஷயமும் ஆகும்.

கடந்த சில பத்தாண்டுகளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் நடக்கின்றன. ஒருவர் முனைவர் பட்டம் அல்லது தேசிய/ மாநிலத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று உதவிப் பேராசிரியர் பணியில் சேர 35 முதல் 40 வயதாகிவிடும்.

உதவிப் பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர் பேராசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு 16 ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் மூத்த பேராசிரியராக பதவி உயர்த்தப்படுவார். கடந்த காலங்களில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருபவர்கள் எளிதாக மூத்த பேராசிரியர் நிலையை அடைந்து ஓய்வு பெற முடியும். ஆனால், இப்போது போதிய அளவில் பணி நியமனங்கள் நடக்காததால் பணியில் சேர அதிக வயது ஆவது, பதவி உயர்வில் செய்யப்படும் தாமதம் ஆகியவற்றால் பேராசிரியர் என்ற நிலைக்கு உயர்வதே மிகவும் கடினமாக இருக்கிறது. மூத்தப் பேராசிரியர் என்ற நிலையை அடைவது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இவை அனைத்துக்கும் காரணம் பதவி உயர்வு வழங்கப்படாதது தான்.

கல்லூரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுடன் முடிந்து விடுவதில்லை. பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும், மன உளைச்சலுக்கும் ஆளாகும் ஆசிரியர்கள், விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்