காஞ்சிபுரம்: காஞ்சி மாநகராட்சியின் திருக்காலிமேடு பகுதியில் உள்ள இந்திரன் தீர்த்தக் குளம் உள்ளிட்ட முக்கிய குளங்களின் கரைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் கோயில்களின் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் ஏராளமான குளங்கள் அமைந்துள்ளன. அக்காலத்தில் நகரப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், குடியிருப்புகள் பெருக்கம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டமைப்புகள் முறையாக இல்லாததால், வைகுண்ட பெருமாள் கோயில்,ஏகாம்பரநாதர் கோயில், அஷ்டபுஜம் கோயில் குளங்கள் மற்றும் ரங்கசாமி குளம், பொய்கை ஆழ்வார் குளங்கள் மழைநீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன.
ஆனால், திருக்காலிமேடு பகுதியில் உள்ள வண்ணாங்குளம், அதனுடன் இணைந்துள்ள ரெட்டேரி, சின்ன வேப்பங்குளம், இந்திரன் தீர்த்தக் குளம் ஆகியவை ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில், இக்குளங்களின் கரைகளை ஆக்கிரமித்து தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், குளங்களுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
மேலும், நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி 2 அடுக்குகள் கொண்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அதனால், நிலத்தடி நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றமாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: இந்திரன் தீர்த்தக் குளம் மிகவும் பிரசித்திப் பெற்றது. சாபவிமோசனம் பெறுவதற்காக இந்திரன் இக்குளத்தில் நீராடி பிரம்மதேவரை வணங்கியதாக கூறப்படுகிறது. தற்போது, ஆக்கிரமிப்புகளால் குளம் இருப்பதே தெரியவில்லை. நீர் நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்படும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், குளக்கரையில் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு என கருதப்படும் வீட்டில் 2-வது மாடி கட்டப்படும்போது, அக்கட்டிடத்துக்கு எவ்வாறு புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது எனத் தெரியவில்லை.
மேலும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்ணாங்குளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்பு ஒன்றின் முதல்மாடியில், சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் வாடகைக்கு குடியிருந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பின்னால் குளம் இருந்ததால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தீயணைப்பு மீட்புப் பணி வீரர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சிலிண்டர் விபத்து கீழ் தளத்தில் ஏற்பட்டிருந்தால், நீர்நிலையில் அமைக்கப்பட்டுள்ள அஸ்திவாரம் சேதமடைந்து பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும். நீர்நிலை என்பதால், சிலிண்டர் வெடித்தபோது அருகில் உள்ள குடியிருப்புகளில் அதிர்வுகள் உணரப்பட்டு சுவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், இக்குளக்கரைகளில் தொடர் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், ஏற்கெனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வருவாய்த் துறை மற்றும்மாநகராட்சி நிர்வாகிகள் கூறியதாவது: நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருக்காலிமேடு பகுதியில் குளக்கரைகளில் ஆக்கிரமிப்புகளைத் தடுத்து, ஏற்கெனவே உள்ள ஆக்கிரமிப்புளை அகற்றி, நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago