சென்னை : 8 வழிச்சாலை திட்டத்தில் நிலம் கையப்படுத்துவதில் மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க, திட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்குவதற்குப் பதிலாக அச்சத்தை அதிகரித்திருக்கிறது.
இந்த விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே இந்த அச்சத்தைப் போக்க முடியும்.
» கரோனா தொற்று குறைவதைப் பொறுத்து ஞாயிறு முழு ஊரடங்கு குறித்து முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை படப்பையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம் எந்த நேரமும் மீண்டும் தொடங்கப்படும்; அதற்காக தங்களின் நிலங்கள் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற அச்சம் அச்சாலை அமையவுள்ள 6 மாவட்டங்களின் விவசாயிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. தருமபுரியில் கடந்த டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட உழவர்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், இது தொடர்பான தங்களின் அச்சத்தை வெளிப்படுத்திய விவசாயிகள், 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்று கோரி மனு அளித்தனர்.
அவர்களுக்குப் பதில் அளித்து தருமபுரி மாவட்ட நிலம் எடுப்பு வருவாய் அலுவலர் முகுந்தன் அனுப்பியுள்ள கடிதம் தான் புதிய அதிர்வலைகளையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே எட்டு வழிச் சாலைக்காக நில கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டபோது தனியாரின் பட்டா நிலங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பிரிவு செய்து பெயர் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. தனியார் நிலங்கள் அந்தந்த பட்டாதார்கள் பெயரிலேயே உள்ளது. எனவே பட்டாதாரர்கள் தங்கள் நிலங்களை பாகப் பிரிவினை செய்யவோ, பத்திரம் செய்யவோ, கடன் உதவி பெறவோ எந்தத் தடையும் இல்லை” என்று அந்தக் கடிதத்தில் மாவட்ட வருவாய் அலுவலகர் குறிப்பிட்டிருந்தார். இது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால்,தருமபுரி மாவடத்தில் பாப்பிரெட்டிபட்டி, அரூர் வட்டங்களில் எட்டு வழிச் சாலைக்காக நிலம் எடுக்கும் பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச் சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் சுமார் 7,000 விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் என்பதால் தான் அந்தத் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்படும் மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்த நான், அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து 2019ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அத்தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், புதிய அறிவிக்கை வெளியிட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பளித்தது. ஆனாலும் கூட, எனது சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று தான் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களையும் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அது தான் நான் தொடர்ந்த வழக்கின் மூலம் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். அந்த வெற்றியையும், அதன் மூலம் மீட்டெடுத்து விவசாயிகளிடம் வழங்கப்பட்ட நிலங்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அந்தக் பொறுப்பை ஒருபோதும் அரசு தட்டிக்கழிக்க முடியாது.
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று நிலம் எடுப்புக்கான தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருப்பதன் மூலம், தங்களின் நிலம் மீண்டும் பறிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் 8 வழிச் சாலைத் திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு தயாரித்திருக்கிறது. சமூக, பொருளாதார தாக்க அறிக்கை தயாரிப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள கேரள அரசின் கிட்கோ நிறுவனம், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவை 6 மாவட்ட விவசாயிகள்அச்சத்தை அதிகரித்துள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமரை சந்தித்த ஸ்டாலின் தமிழகத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அது தமிழக அரசின் நிலை என்றால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகு அரசு வழிகாட்டுதல்படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கூறியிருக்கத் தேவையில்லை. மாறாக, 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படாது; அதனால் விவசாயிகள் எந்த வகையிலும் அச்சப்படத் தேவையில்லை என்று உறுதியாக கூறியிருக்கலாம்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழ்நாட்டு உழவர்களிடம் நிலவும் அச்சத்தை தமிழக அரசு போக்க வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மாறாக 8 வழிச்சாலை திட்டம் திணிக்கப்பட்டால் அதை எதிர்த்து அரசியல் மற்றும் சட்டப்போராட்டங்களை பா.ம.க. முன்னெடுக்கும்."
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago