முன்னாள் முதல்வர் அண்ணா கொண்டு வந்த பேருந்துகள் நாட்டுடமை திட்டம் தற்போது 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அடுத்தகட்ட வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா முதல்வராக பொறுப்பு ஏற்றதும் 1967-ல்செயல்படுத்திய திட்டங்களில் முக்கியமானது பேருந்து போக்குவரத்தை நாட்டுடமை ஆக்கியது. ஆரம்பத்தில் நீண்டதூர விரைவு பேருந்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன. பின்னர், 1972-ம் ஜன.17-ம்தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் சிறு, குறு, நகர, கிராமப் பேருந்துகள் என பெரிய அளவில் தேசியமயமாக்கப்பட்டன.
இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு பெரிய வெற்றியைக் கண்டது. இதனால் கிராமப்புறங்களுக்கு பேருந்து வசதி, வேலைவாய்ப்பு, தொழிலாளருக்கு தரமான பணியிடச் சூழல், குறைந்தகட்டணத்தில் மக்கள் பயணம் மேற்கொள்ளும் வசதி, அரசுக்கு நிதிசுமை இல்லாமல், அதிக வரிவருவாய் என முதல் 20 ஆண்டுகளில் நல்ல லாபமும் ஈட்டியது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தைக் கொண்டுஒரு பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் 3பால்டெக்னிக்குகளும் உருவாக்கப்பட்டன. நாட்டுடமை கொள்கையின்படி சுமார் 3,500 தனியார் பேருந்துகள் மட்டுமே அரசுடமைஆக்கப்பட்டன. அதன்பிறகு, எந்தவித அரசு நிதி உதவியும் இல்லாமல் 18 ஆயிரம் புதிய பேருந்துகள், ஏராளமான பணிமனைகள் மற்றும் தலைமையகக் கட்டிடங்கள் என உருவாக்கப்பட்டன.
1997 வரை அரசின் நிதி ஆதாரம் இல்லாமல் இருந்தது. இன்றும்கூட தமிழகத்தில் அதிக சொத்துகள் கொண்ட துறைகளில் ஒன்றாக அரசு போக்குவரத்து துறை உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் தற்போது 50-ம் ஆண்டு தொடக்கத்தில், பொன்விழாவைக் கொண்டாடுகின்றன.
தமிழகத்தில் திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும், போக்குவரத்துத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதனால்தான் மற்ற மாநிலங்களை விட அதிகமாகவும், குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகளை இயக்கும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிய முன்னாள் நிர்வாக இயக்குநர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் புறநகர் மற்றும் கிராமப்புற பொருளாதார, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் ஆணிவேராக இருப்பது அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், தற்போது பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசபயணத் திட்டம் என சமூக நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும் முக்கியமான துறையாக இருக்கிறது.
தினமும் ரூ.10 கோடி இழப்பு
ஆனால், சமீபகாலமாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகள் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் சுமார் ரூ.10 கோடி இழப்பு ஏற்படுகிறது. படிப்படியாக அதிகரித்து வரும் கடன் சுமை தற்போது ரூ.44 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. சில நேரங்களில் ஊழல் முறைகேடு புகார்களும் எழுந்துள்ளன. இந்தப்போக்கை மாற்ற அரசு போக்குவரத்துக் கழகங்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த பேருந்து கட்டணம் உள்ளதோடு, பேருந்து இயக்கச் செலவுகள், நஷ்டம் அதிகரிக்கும்போதும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் மக்களின் நலனுக்காக தமிழக அரசுசெயல்படுவதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும், அரசு போக்குவரத்துத் துறை சீர்குலையாமல் இருக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
அதுபோல், கட்டண உயர்வு இல்லாமல் இதர வழிகளில் வருவாயைப் பெருக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். குறிப்பாக, எரிபொருள் செலவைக் குறைக்க மின்சாரப் பேருந்துகள் இயக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், தேவையற்ற நிர்வாகச் செலவுகளைக் குறைக்க வேண்டும், சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் இடங்களில் வணிக வளாகங்களை அமைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்கள் 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பொதுமக்களின் போக்குவரத்து வசதி மட்டுமல்லாமல், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்கை ஆற்றி வருகிறது. லாபநோக்கமின்றி சேவை நோக்கத்தோடு பணியாற்றி வருகிறது. எனவே, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
அரசின் சமூகநல நோக்கங்களை நிறைவேற்றுவதில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முன்னோடியாகச் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் 25 ஆண்டுகளை நிறைவு செய்தபோது முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வெகுமதி பரிசாக கடிகாரம் வழங்கப்பட்டது.
அரசுப் போக்குவரத்துக் கழகதொழிலாளர்கள் பல்வேறு இழப்புகளுடன் பணியாற்றி வருகின்றனர். எனவே, பொன்விழா ஆண்டின் வெகுமதியாக ஊதியத்தில் ஒருஇன்கிரிமெண்ட் உயர்வு, அகவிலைப்படி உயர்வை வழங்குதல், ஊதிய உயர்வு ஒப்பந்தம், பெண்கள் பயணத்துக்கு உரிய பேட்டா ஆகியவைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago