பேருந்து நிலைய குத்தகை விவகாரம்: சேலம் - மேச்சேரி பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: ’பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலத்திற்கான குத்தகை பாக்கியை இரண்டு வாரங்களில் செலுத்தாவிட்டால், இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்படும்’ என சேலம் - மேச்சேரி பேரூராட்சியை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ’சேலம், மேச்சேரியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 46 செண்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்த மேச்சேரி பேரூராட்சி, அங்கு பேருந்து நிலையம் மற்றும் கடைகள் அமைத்துள்ளது. இந்த நிலத்துக்கு 2002-ஆம் ஆண்டு முதல் பேரூராட்சி நிர்வாகம் முறையாக வாடகை செலுத்தவில்லை. 2018-ஆம் ஆண்டு வரை 13 லட்சத்து 39 ஆயிரத்து 167 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. எனவே இந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் நிலத்தில் பேருந்து நிலையத்துடன் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கான வாடகையைப் பெறும் பேரூராட்சி நிர்வாகம், கோயிலுக்கான வாடகையை செலுத்தாததால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. மேச்சேரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நிலத்துக்கான வாடகையை உயர்த்தி கோயில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு அரசிடம் நிலுவையில் உள்ளதால், வாடகை பாக்கியை கோயில் நிர்வாகம் கோர முடியாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கோயில் நிலத்தில் கட்டப்பட்ட கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் பேரூராட்சி நிர்வாகம், இரண்டு வாரங்களில் வாடகை பாக்கி 13 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பிட்ட இந்த காலக்கெடுவுக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால், கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கருதி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகத்துக்கு அனுமதியளிக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 2-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE