மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி 'செம்மொழிச் சாலை' - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் இணைப்புச் சாலை இனி 'செம்மொழிச் சாலை' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று செம்மொழி விருது வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடந்த 2010 முதல் 2019-ஆம் ஆண்டுகள் வரையிலான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் செம்மொழித் தமிழ் விருதுகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஆற்றிய உரை: “தமிழுக்கும் அமுதென்றுபேர்- அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்” என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை நெஞ்சில் ஏந்தி, இந்த விழாவின் மேடையில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன்.தமிழுக்குச் செம்மொழித் தகுதி ஏற்பட வேண்டும் என்பது தமிழறிஞர்களின் நூற்றாண்டுக் கனவு. அந்தக் கனவை நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அத்தகைய தலைவரின் பெயரால் அமைந்திருக்கக்கூடிய செம்மொழித் தமிழாய்வு விருதுகள், அதை விழாவாக, அதிலும் குறிப்பாக, அண்ணா பெயரில் அமைந்திருக்கக்கூடிய இந்த நூலகத்தின் அரங்கத்தில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்து தமிழுக்குத் தொண்டாற்றிய இரண்டு பெருமக்களின் நினைவை ஏந்தி இந்த விழா மேடையில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழ் தொன்மையான மொழி என்பதைத் தமிழர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. உலகம் முழுவதும் இருக்கும் மொழியியல் அறிஞர்கள், இனவியல் அறிஞர்கள் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் உண்மை இது.

தமிழ் குறிப்பிட்ட நாட்டு மக்கள் பேசும் மொழியாக மட்டுமல்ல, ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது நம்முடைய தமிழ் மொழியானது. நிலத்துக்கு, மண்ணுக்கு, இயற்கைக்கு, மக்களுக்கு, பண்பாட்டுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கக்கூடிய மொழி. தமிழைப் பேசும் போது இனிமையாக இருக்கிறது. தமிழைக் கேட்கும்போது இனிமையாக இருக்கிறது. ஏன், ‘தமிழ்’ என்று சொல்லும்போதே இனிமையாக இருக்கிறது. தமிழ் என்றாலே இனிமை என்றுதான் பொருள். ‘இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்’ என்று பிங்கலநிகண்டும் கூறுகிறது.தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. தமிழ், எந்த மொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் ஏராளமான மொழிகள் உருவாகியுள்ளன. இப்படிப் பல மொழிகளை உருவாக்கும் திறன்கொண்ட மொழிதான், நமது தாய்மொழியான தமிழ். தமிழ், தமிழரசி, தமிழரசன் என்று மொழியின் பெயரையே பெயராக வைத்துக்கொள்ளும் அளவுக்கு பற்று நம் இனத்தில் இருக்கிறது. மொழிக்காக உயிரைத் தந்த தியாகிகளைப் பெற்ற மொழியும் நம் தமிழ்மொழி ஆகும்.

இலக்கியச் செழுமையும் இலக்கண அறிவும் கொண்ட மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அறிஞர்கள் இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்தது. அந்தக் கனவை நிறைவேற்றி வைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள், மத்திய அரசால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், அன்றைய மத்திய அரசால் 2007-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. தொடக்கத்தில் இந்த நிறுவனம், மைசூரில், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் இருந்து செயல்பட்டது. 2008-ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் முதல் சென்னைக்கு இந்த நிறுவனம் மாற்றப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கும் காரணமாக இருந்தவர் தலைவர் கருணாநிதி.
சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் அலுவலகத்தை அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு சூன் 30-ஆம் திறந்து வைத்தார். செம்மொழி நிறுவனத்துக்கு எனத் தனியாக ஒரு கட்டடம் அமைய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார், அதற்காக 2007-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் சென்னை பெரும்பாக்கத்தில் 16 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். சுமார் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் அந்த இடத்தை சமப்படுத்தி வழங்கினோம்.

அந்த இடத்தில் 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு மாபெரும் கட்டடம் அமைத்துத் தந்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி அந்தக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்திருக்கிறார். காணொலி வாயிலாக நடந்த அந்த விழாவுக்கு நான் முன்னிலை வகித்துப் பேசும்போது - ' இந்தியப் பிரதமர் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்துள்ளார்கள். அதற்காகத் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும், அரசின் சார்பிலும், தனிப்பட்ட என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுச் சொன்னேன். ''தலைவர் கருணாநிதி இன்று இருந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின்போது தமிழுக்கு இத்தகைய சிறப்பு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது" என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பார்கள். அதன் பிறகு நானும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் பெரும்பாக்கம் சென்று தமிழாய்வு நிறுவனத்தைப் பார்வையிட்டோம். உண்மையில் மிகச் சிறப்பாக அந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதல் இன்று வரை இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 41 செவ்வியல் தமிழ் நூல்களின் ஆய்வுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. தொல் பழங்காலம் முதல் கி.பி. 6-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதிக்குள் தோன்றிய இலக்கிய, இலக்கணம் குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய இந்த நிறுவனம், தமிழ்மொழி ஆய்விலும் அதன் மேம்பாட்டிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. செம்மொழித் தமிழின் தொன்மையையும் தனித் தன்மையையும் அவற்றின் மரபுத் தொடர்ச்சியையும் ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்நிறுவனம் கருதிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் செம்மொழித் தமிழாய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு, 2008-ஆம் ஆண்டு சூலை 24-ஆம் நாள், தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை தலைவர் கருணாநிதி வழங்கினார். ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை’ என்ற பெயரால் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை சார்பில் தகுதிசால் தமிழறிஞர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இந்தியாவிலேயே மிக உயரிய விருதாக, பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கொண்டது இந்த விருது. பாராட்டு இதழும், தலைவர் கருணாநிதியின் உருவம் பொறித்த நினைவுப்பரிசும் வழங்கப்படும். முதல் விருது 2010, ஜூன் 23-அன்று கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், அன்றைய குடியரசுத் தலைவரால் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘பேராசிரியர் அஸ்கோபார்ப்போலா’க்கு வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக ஆண்டுதோறும் இந்த விருதைத் தொடர்புடைய அரசுகள் வழங்கி இருக்க வேண்டும். அதை இந்த மேடையில் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை.

தமிழுக்கு, தமிழறிஞர்களுக்குச் செய்ய வேண்டிய பாராட்டுகள், மரியாதையில் கூட அரசியல் புகுந்ததன் காரணமாக, 2011-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. திமுக அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.வேறு எதற்காக இல்லாவிட்டாலும் , தமிழறிஞர்களுக்கு விருது கொடுப்பதற்காகவாவது, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்ததை நினைத்து இன்றைய நாளில் நான் பெருமைப்படுகிறேன். எப்போதும் தமிழுக்காகவே உழைத்திடும் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதெல்லாம், தமிழின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்,நமது மாநிலத்துக்கு மொழியின் பெயரால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது, திமுக ஆட்சியில்தான். தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுவி, அதனை மாநிலப் பாடல் ஆக்கியதும் திமுக ஆட்சியில்தான்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளைப் அண்ணா தலைமையில் தொடங்கி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரை நடத்தி, தமிழை உலகளவில் கொண்டு சென்றது. அய்யன் வள்ளுவர் ,அவ்வையார் முதலான பழங்காலத் தமிழ்ப் புலவர்கள் தொடங்கி, கால்டுவெல், ஜி.யு.போப் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் வரை, திருவுருவச்சிலை நிறுவியதும் திமுக ஆட்சியில்தான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சமூகநீதி வழியில் உயர்கல்வியில் இடஒதுக்கீடு தந்தது திமுக ஆட்சிதான்.வள்ளுவருக்குச் சென்னையில் கோட்டமும் , குமரியில் 133 அடியில் வானுயர்ந்த சிலையும் நிறுவி உலகமே அண்ணாந்து பார்க்க வைத்த ஆட்சிதான் திமுகஆட்சி.சுவடிகளில் இருந்து புத்தகங்களுக்குத் தமிழ் மாறியது போல், தமிழை இணையத்துக்குக் கொண்டு செல்ல 1999-லேயே தமிழ் இணைய மாநாடு நடத்தியதும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தை நிறுவி, இன்று உலகில் எங்கிருந்தாலும், தமிழ் இலக்கண, இலக்கியங்களை அனைவரும் படிக்கும் அளவிற்குத் தமிழை இணையப்படுத்தியதும் திமுக ஆட்சி தான்.இப்படி என்னால், ஒரு நீண்ட பட்டியலை சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

இப்படித் திமுக ஆட்சி தமிழுக்கு ஆற்றிய பணிகளின் தொடர்ச்சியாகத் தான் இந்த விழாவில் சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைந்துள்ள மேடவாக்கம் – சோழிங்கநல்லூர் இணைப்புச்சாலை இனி “செம்மொழிச் சாலை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படும். செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய, தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும்.விருது பெற்ற தமிழறிஞர்கள் அனைவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உங்களுக்கு விருது வழங்கியதன் மூலமாகச் செம்மொழி நிறுவனம் பெருமை அடைகிறது, ஏன், நானும் பெருமை அடைகிறேன், தமிழ்நாடு அரசும் பெருமை அடைகிறது. இந்த விருதின் மூலமாகத் தமிழ்மொழி மேலும் சிறப்படையப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை நீங்கள் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

பழமைக்குப் பழமையாய், புதுமைக்கு என்றும் புதுமையாய் இருக்கக்கூடிய மொழி நம்முடைய தமிழ் மொழி. இந்த மொழி குறித்த ஆய்வுகள் தமிழ்நாட்டோடு, இந்திய எல்லையோடு முடிந்துவிடாமல் உலகளாவியதாக அமைய வேண்டும். உலக மொழியியல் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக நமது ஆய்வுகள் அமைய வேண்டும். மொழியை ஒரு பண்பாடாகச் சொல்வது உலக மரபாகவே உள்ளது.
’நோம்சாம்ஸ்கி’ போன்ற உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், மொழியை மூளையின் ஓர் உறுப்பு என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். “குழந்தையின் மூளைக்குள் ஒரு மொழியறிவு இருக்கிறது, இது மனித இனத்துக்கே உரியது” என்று அவர் சொல்கிறார். 'தமிழ் எங்கள் இளமைக்குப் பால்' என்று எப்போதோ சொல்லிவிட்டார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

உங்களது ஆய்வுகள் அறிவுப்பூர்வமானதாக மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமானதாகவும் அமைய வேண்டும். அப்படி அமைந்தால் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் தேடி வரக்கூடிய இடமாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நிச்சயமாக மாறும். அப்படி உயர்ந்து நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’எங்கும் தமிழ், எதிலும் தமிழ்!’ என்று அண்ணா காட்டிய பாதையில், தலைவர் கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வையோடு நடைபோடும் அரசு, தமிழை ஆட்சிமொழியாகவும் வழக்காடு மொழியாகவும் மேலும் உயர்த்திட தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதைக் கூறி, தமிழ் வாழ்க! செம்மொழித் தமிழ் வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன் எனத் தெரிவித்தார்.

விருதுகள்: முன்னதாக இந்த விழாவில், 2011 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் பொன். கோதண்டராமனுக்கும் (மேனாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்), 2012 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்திக்கும் (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்), 2013 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் ப. மருதநாயகத்துக்கும் (மேனாள் இயக்குநர், புதுவை மொழியியல் பண்பாட்டு நிறுவனம், மேனாள் பதிவாளர், புதுவைப் பல்கலைக்கழகம்), 2014 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு. மோகனராசுக்கும் (மேனாள் பேராசிரியர் & தலைவர், திருக்குறள் ஆய்வு மையம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை), 2015 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,சென்னை) 2016ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கா. ராஜனுக்கும் (மேனாள் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுவைப் பல்கலைக்கழகம்) 2018 ஆம் ஆண்டிற்கான விருதினைக் கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு (மேனாள் தமிழ்ப் பேராசிரியர், புதுக்கல்லூரி, சென்னை) 2019 ஆம் ஆண்டிற்கான விருதினைப் பேராசிரியர் கு. சிவமணிக்கும் (மேனாள் முதல்வர், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் & திருவள்ளுவர் கல்லூரி, நெல்லை) முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்கினார். விருதாளர்களுக்கு விருதுடன் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ், வெண்கலத்தாலான மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையையும் வழங்கி முதல்வர் கௌரவித்தார். இந்த விழாவில் அமைச்சர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு துறைச் செயலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்