நெரிசலில் தத்தளிக்கும் மதுரை இனி அழகான மதுரையாக மாற்றப்படும்: புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்து ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: "நெரிசலில் தத்தளிக்கும் மதுரை இனி அழகான மதுரையாக மாற்றப்படும்" என்று காணொலி வாயிலாக புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக மதுரை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:

"இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு நடைபெற வேண்டும் என்ற உணர்வோடு நம்முடைய வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அதிகமாகி, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காரணத்தால், இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் கூட, அவரோடு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் எப்படியாவது நான் வந்து விடுகிறேன் என்று என்னிடத்தில் சொன்னபோது, வேண்டாம், கட்டாயம் வரக்கூடாது, முதலில் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள், அதற்குப் பிறகு பார்க்கலாம் என்று சமாதானம் செய்து, அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, மருத்துவமனையில் இருந்தாலும் தொலைக்காட்சி மூலமாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். ஆகவே, இந்த நிகழ்ச்சி சிறப்போடு அமைவதற்கான எல்லா பணியிலும் ஈடுபட்ட அவருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லி, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நீதிகேட்டு கருணாநிதி நெடும்பயணம் தொடங்கிய மண் மதுரை: நீதிகேட்டு கண்ணகி முழங்கிய இந்த மதுரை மண்ணில் - சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இந்த மண்ணில் – தமிழினத் தலைவர் நம்முடைய தலைவர் கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் தொடங்கிய இந்த மண்ணில் - எனக்கு அரசியல் பயிற்சிக் களமாக அமைந்த இளைஞர் அணி தொடங்கப்பட்ட இந்த மண்ணில் – இன்று நடக்கும் அரசு விழாவில் காணொலி வாயிலாகப் பங்கெடுப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன்.

முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும் - புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் - பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும் - நடக்கின்ற இந்த விழா. கரோனா காலமாக இல்லாமல் இருந்தால் மதுரையே குலுங்கக்கூடிய வகையில் பிரமாண்டமாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்கும், நேரடியாக நாங்களும் வந்திருப்போம்.

அமைச்சர் மூர்த்தி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவிட்டாலும், அவர் ஒருவார காலமாக ஜல்லிக்கட்டுப் போட்டியை பிரமாண்டமாக நடத்திக் காட்டிய பெருமை அவரைச் சாரும். - இந்த விழாவையும் அதற்கு இணையாக நிச்சயமாக நடத்தி இருப்பார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதைப் பிரமாண்டமாக நடத்திக் காட்டுவதில் மூர்த்தி சிறந்த வல்லவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர். எத்தனையோ விழாக்களை மதுரையில் அவருக்கே உரிய பாணியில் பிரமாண்டத்தோடு நடத்திக் காட்டியிருக்கிறார். காளையை அடக்க எப்படி மூக்கணாங்கயிறு அவசியமோ, அதைப் போல நாங்கள்தான் அவரைக் கட்டுப்படுத்துவோம். இல்லாவிட்டால் மிகப் பிரமாண்டத்தைக் காட்டிவிடுவார். பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்து - அந்தத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து - அதன் வழியாக அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக அதனை மாற்றி கொண்டிருக்கக்கூடியவர் மூர்த்தி.

பெருமைமிகு பிடிஆர் குடும்பம்: அதைப் போலத்தான் நம்முடைய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவர் எந்த அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அதிகம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், பூரிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மூன்று தலைமுறைகளாக இந்த மாநிலத்தில் வளர்ச்சிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர் பி.டி.ஆர். அவர்களது குடும்பம். இது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். பி.டி.ராஜன் இந்த மாநிலத்தின் அமைச்சராக இருந்தவர். சில காலம் பஃர்ஸ்ட் மினிஸ்டராகவும் இருந்தவர். தமிழகத்தில் கூட்டுறவுத் துறை செழிக்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர், அதற்கு அடித்தளம் அமைத்தவர் பி.டி.ராஜன்.

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தமிழக சட்டப்பேரவையின் மாண்பைக் காக்கக்கூடிய வகையில் அவையின் தலைவராகவும், அதற்குப் பிறகு அமைச்சராகவும் இருந்தவர். அவரது அருமைப் புதல்வர் தான் நம்முடைய பழனிவேல் தியாகராசன், இன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அமைச்சரவையிலே மிகமிக கடினமான துறை எது என்றால், அது நிதித்துறைதான்.\ நிதி நிலைமை மோசமாக இருந்தாலும் - அதைக் காரணமாகச் சொல்லாமல் - நிதியை வழங்க வேண்டிய நெருக்கடியான கடமை அமைச்சர் பொறுப்பேற்று இருக்கக்கூடிய பழனிவேல் தியாகராஜனுக்குத்தான் உண்டு.

நிதியை உருவாக்கவும் - இந்த அரசின் கொள்கைத் திட்டங்களை வகுப்பதிலும் தனது மொத்த திறமையையும் வழங்கி வருபவராக பழனிவேல் தியாகராசன் இருந்துகொண்டிருக்கிறார். அமைச்சர்கள் மூர்த்தியும் - பழனிவேல் தியாகராசனும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள். அமைச்சர்கள் இருவருக்கும் ஈடு கொடுத்து சிறப்பாக பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். அதேபோல அவர்களுக்குத் துணை நின்று கொண்டிருக்கும் அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் நான் என்னுடைய இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நவீன மதுரையை உருவாக்கியது திமுகதான்: சங்ககால நகரமாக மதுரை இருந்தாலும் நாம் பார்க்கும் நவீன மதுரையை உருவாக்கியது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். நகராட்சியாக இருந்த மதுரையை 1971-இல் மாநகராட்சியாக தரம் உயர்த்தி மேம்படுத்திய அரசு, நம்முடைய தி.மு.க. அரசு தான்; மாவட்ட நீதிமன்றம் அமைக்க அடிக்கல் நாட்டியவர் முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா. அதை திறந்து வைத்தவர் முதலமைச்சராக இருந்த நம்முடைய தலைவர் கருணாநிதி; சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரையில் அமைய வேண்டும் என்று முதன்முதலாக 1973-ஆம் ஆண்டு முயற்சித்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. 1989-ஆம் ஆண்டும் முயற்சித்தார். 1996-ஆம் ஆண்டு நிலத்தை கையகப்படுத்த உத்தரவு பிறப்பித்தார். அதற்காக 5 கோடி ரூபாயை ஒதுக்கினார். அதுவும் கழக ஆட்சியில்தான், 2000-ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது; இந்தியாவுக்கு வளம் சேர்க்கும் திட்டமாக மாறியிருக்கக் கூடிய சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்கவிழாவை நாம் நடத்தியதும் மதுரையில்தான்; மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றினோம். புதிய டெர்மினல் முனைய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி அவை திறந்து வைக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான்; மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடத்துக்கு 2007-இல் நான்தான் அடிக்கல் நாட்டினேன். இப்படி மதுரைக்குச் செய்த சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய சாதனைச் சரித்திரத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறோம்.

கருணாநிதி பெயரால் மாபெரும் நூலகம்: சங்கம் வளர்த்த மதுரையில் மாபெரும் நூலகம் அமையப் போகிறது. அதுவும் கருணாநிதி பெயரால் அமையப் போகிறது. 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அது கட்டப்பட இருக்கிறது. 2.70 ஏக்கர் நிலத்தில் - 2,13,288 சதுர அடி கட்டடப் பரப்பில் - 8 தளங்களுடன் அமையப் போகிறது. இந்த நூலகத்துக்குத் தேவையான நூல்கள், மின் நூல்கள், இணையவழி பருவ இதழ்கள், ஆகியவை வாங்க 10 கோடி ரூபாயும், தொழில்நுட்ப சாதனங்கள் வாங்குவதற்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய இருக்கிறார்கள். காலத்தால் அழிக்க முடியாத அறிவுக்கருவூலமாக 'கலைஞர் நினைவு நூலகம்' அமையப் போகிறது. அதுவும் மதுரை மண்ணில் அமையப் போகிறது என்பது உங்களுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் பெருமையாகும்.

அதேபோல் மதுரை நகரை மேம்படுத்துவதற்காக மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கி இருக்கிறோம். மதுரையில் மக்கள்தொகையின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. எனவே அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கித் தர வேண்டியது ஒரு அரசின் கடமையாகும். அந்தக் கடமையை, இந்த அரசு அமைந்ததும் உணர்ந்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். 1972-ஆம் ஆண்டு கருணாநிதிதான் முதன்முதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தை உருவாக்கினார். அதுதான் சென்னையை நவீன சென்னையாக உருவாக்கியது.

அழகான மதுரைக்காக நகர வளர்ச்சிக் குழுமம் தொடக்கம்: அந்த வரிசையில் மதுரை நகர வளர்ச்சிக் குழுமத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி நான் பெருமையாகக் கருதுகிறேன். இதன்மூலமாக மதுரை மாநகருக்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தித் தர உள்ளோம். இந்த வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்த 14 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். மதுரையானது மாமதுரையாக - அழகான மதுரையாக - எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற மதுரையாக மாற்றிக் காட்டப்படும் என்று இக்கூட்டத்தின் வாயிலாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் உறுதி அளிக்கிறேன். இதன்தொடர்ச்சியாக மேலும் சில அறிவிப்புகளைச் செய்ய நான் விரும்புகிறேன்.

• மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை வசதிகளை அமைக்கவும், இந்த வசதி ஏற்கனவே உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளை மேம்படுத்தவும் 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும்.

• மதுரை நகரின் மையப் பகுதியில் தற்போது அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தையும் புறநகர் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

• உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே தீ விபத்தில் சேதடைந்த வீரவசந்தராயர் மண்டபம் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் புனரமைக்கப்படும். திருப்பணிகளும், புனரமைப்புப் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட்டு இரு ஆண்டுகளில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.

• மதுரை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத்தையும் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்றி, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஒரு திட்டம் 50 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

• மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, 100 கோடி ரூபாய் மதிப்பில் வைகை ஆற்றின் வடகரையில் உள்ள சாலையை நீட்டிப்பதற்கும், மேலக்கல் சாலையை அகலப்படுத்துவதற்கும் தேவையான பணிகள் செயல்படுத்தப்படும்.

• நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை, மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றி அமைக்கப்படும். தற்போது உள்ள அந்த சிறைச்சாலை இடம், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்த வகையில் பசுமைப் பகுதியாக மேம்படுத்தப்படும்.

• வண்டியூர், செல்லூர் மற்றும் தென்கரை ஏரிப்பகுதிகள், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் பொது பயன்பாட்டு இடங்களாக மேம்படுத்தப்படும்.

• விரகனூர் சந்திப்பு, அப்போல்லோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, இராஜாஜி மருத்துவமனை சந்திப்பு போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் சந்திப்புகளில், புதிய மேம்பாலங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.

• தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகையில் மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும்.

• உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட பண்பாட்டு அடையாளமான ஏறு தழுவுதலை நம் வீர விளையாட்டை முறைப்படுத்தி பாதுகாப்பது நம் கடமையாகும். உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மாபெரும் அரங்கம் ஒன்று மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்படும்.

• தமிழரின் வீர விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய காளை இனங்கள் குறித்த அருங்காட்சியகம் ஒன்று ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கக்கூடிய வகையில் நிரந்தர அரங்கம் வீரர்கள் மற்றும் காளைகளின் நலம் காக்க மருத்துவமனைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் அமையும். இன்றைய நாள் 51.77 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

49.74 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளைத் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாக கிடைத்த மனுக்கள், முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலமாக கிடைத்த மனுக்கள் என்ற வகையில், எங்களுக்கு 40 ஆயிரத்து 978 மனுக்கள் கிடைத்துள்ளன. இதில் முதல் கட்டமாக 23 ஆயிரத்து 879 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் 67 ஆயிரத்து 831 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படுகின்றன. இதன் மதிப்பு 219 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக இன்றைய நாள் மட்டும் 342.33 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மக்களுக்குக் கிடைத்துள்ளன.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 6 தளம் கொண்ட கல்விக் கூடம்; 5 தளம் கொண்ட குடியிருப்பு வளாகம்; குருவிக்காரன் சாலையில் உயர்மட்ட மேம்பாலம்; முடுக்குவார் பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை; மணியாஞ்சியில் கூடுதல் வகுப்பறை; யா.ஒத்தக்கடையில் கூடுதல் வகுப்பறை; செல்லம்பட்டி, கருப்பட்டி, அரசப்பட்டியில் அங்கன்வாடி கூடங்கள் ஆகியவை இன்று முதல் திறக்கப்படுகின்றன.

இப்படி ஊர் ஊராக - பகுதி பகுதியாக - என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து கொடுக்கும் அரசாக இந்த அரசு இருக்கும். ஊரின் தேவை - ஒரு வட்டாரத்தின் தேவை - ஒரு தெருவின் தேவை - தனிப்பட்ட ஒரு மனிதனின் தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக இந்த அரசு இருக்கும். மைக்ரோ அளவிலான பிரச்சினையையும் கூர்மையாக பார்த்து நிவர்த்தி செய்யும் அரசாக இந்த அரசு இருக்கும்.

பெரிய, பெரிய திட்டங்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறோமோ - அதே அளவுக்கு ஒரு தனிமனிதனின் விருப்பத்துக்கும், தேவைக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக நாங்கள் இருப்போம். அதனால்தான் ஒட்டுமொத்தமாக மதுரை வளர்ச்சிக்கான நகர வளர்ச்சிக் குழுமத்தை அமைத்துள்ளோம். தனிமனிதர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளோம். இதுதான் எங்களது ஆட்சியின் இலக்கணம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்