கரோனா உபயத்தால் 2020 முதல் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை எட்டியிருக்கிறது டோலோ 650 மாத்திரையின் விற்பனை. இந்த மாத்திரையை பெங்களூருவைத் தளமாகக் கொண்ட மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. அந்தவகையில் சர்வ சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பாராசிட்டமால் மாத்திரையின் நன்மை, தீமை என்ன? என்பது குறித்து வேலூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பொது மருத்துவரும், இணைப் பேராசிரியருமான அ. இராமலிங்கத்திடம் பேசினோம்.
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாராசிட்டமால் மாத்திரையைச் சாப்பிடலாமா? அதன் குணாதிசயம் என்ன?
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் முதலில் எந்த மாத்திரையும் சாப்பிடக்கூடாது. பாராசிட்டமால் மாத்திரையின் குணாதிசயம் என்னவென்றால் வலி நிவாரணம் மற்றும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மேலும் ப்ரூபன், டைக்லோபினக், மெப்பனமிக் ஆசிட் என்பன போன்ற பல மருந்துகள் இதுபோல் உள்ளது. இது எல்லாம் ஒரு குடும்பம். இந்த பாராசிட்டமால் என்பது நான் ஸ்டிராய்டல் ஆன்டி இன்பிளெமெட்ரி ட்ரக்ஸ் Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs) என்கிற பிரிவில் வரும். இவை எல்லாவற்றுக்கும் என்ன குணம் என்றால் நம் உடலில் இருக்கும் ப்ராஸ்டா கேண்டின் என்னும் திரவ வேதிப்பொருளைப் கட்டுப்படுத்தி வேலை செய்யும். அந்த திரவத்தின் சுரப்பைப் பொறுத்துதான் காய்ச்சல், உடல் வலி, சோர்வு போன்றவை ஏற்படுகின்றன. அதைக் கட்டுப்படுத்தும் மருந்துதான் பாராசிட்டமால்.
பொதுவாக அலோபதியில் மருந்து என்றாலே ஒரு அளவுதான். ஒருவரின் எடையைப் பொறுத்து மருந்தின் அளவு விகிதம் மாறுபடும். அதிகமாக மருந்து எடுத்துக் கொண்டால் அது விஷமாகி விடும். குறைவாக எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாமல் போய்விடும். எனவே யார் யார், எந்த அளவு மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து சாப்பிடுவது நல்லது.
அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் என்னாகும்?
ஒரு கிலோ எடைக்கு பாராசிட்டமால் 10 மில்லிகிராம் தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் எடைக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆனால் அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் வயிறு புண்ணாகி விடும். அடுத்ததாக கல்லீரல் பாதிப்பு உண்டாகும். பாராசிட்டமாலின் மிகப்பெரிய அச்சுறுத்தலே கல்லீரலைப் பாதித்துவிடும் என்பதுதான். நமக்கு இருப்பது ஒரே ஒரு கல்லீரல் தான். அதை நாம் கட்டாயம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு பாராசிட்டமாலை எத்தனை முறை எடுத்துக் கொள்ளலாம்?
ஒரு நாளைக்கு, மேற்கூறிய அளவில் அதிகபட்சம் 4 முறை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக 4ல் இருந்து 6 மணி நேரம்தான் அந்த மருந்தின் வீரியம் இருக்கும். இதையும் தாண்டி அதே மருந்தை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது கட்டாயம் கல்லீரல் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.
இன்னும் முக்கியமானது, இணை நோய்களுக்குச் சாப்பிடும் மருந்துகளுடன் பாராசிட்டமாலை சேர்த்துச் சாப்பிடுவது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சரியான டோஸ் கொடுக்கவில்லை என்றால் நாம் சாப்பிடும் இரண்டு வெவ்வேறு நோய்களுக்குமான மாத்திரை வேதியியல் வேறுபாடு ஏற்படும். அவை ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதா? இல்லை முரண்படுகிறதா? என்பதைப் பொறுத்து இணை நோய்க்கு சாப்பிடும் மருந்தின் வேகம் மாற வாய்ப்பு இருக்கிறது.
எனவே நாம் சாப்பிடும் ஒரு மருந்தோடு மற்றொரு மருந்து எடுத்துக் கொள்ளும்போது கட்டாயம் டாக்டர்கள் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாக ஒருவருக்கு என்ன நோய் இருக்கிறது என்று பார்த்துதான் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள். நாமாகவே எடுத்துக்கொள்ளும்போது அதில் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது.
பாராசிட்டமாலை எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொள்ளலாமா? பாராசிட்டமால் மாத்திரையால் எப்போது பாதிப்பு வரும்?
எடுத்துக்கொள்ளலாம். அதற்கும் ஒரு காலமுறை இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கமுடியாத சூழலில் உடல் அதிக குளிராக இருக்கிறபோது, காய்ச்சல் இருக்கிறது என்கிறபட்சத்தில் நாமாகவே எடுத்துக்கொள்வது தவறில்லை. ஆனால் தொடர்ந்து அதனை எடுத்துக்கொள்வது தவறானது.
ஜுரம், தலைவலி வந்தால் முதலில் என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு உடனே பாராசிட்டமால் போட்டுக்கொள்ளக் கூடாது. உடலில் நீர்ச்சத்து குறைகிறது என்றால் காய்ச்சல் வரும். பயணம் செய்யும்போதோ, அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போதோ நீர்ச்சத்து குறைந்து உடல் உஷ்ணமாகி, உடல் சோர்வு ஏற்பட்டு உடல் காய்ச்சல் போல கனகனவென்றுதான் இருக்கும். உடனே அதற்கும் நாம் பாராசிட்டமால் எடுத்துக்கொண்டோம் என்றால் என்ன நடக்கும். ஏற்கெனவே உடம்பில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது அதனுடன் பாராசிட்டமால் எடுத்தால் கட்டாயம் பாதிக்கப்படுவோம். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாகத்தான் கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரல் மற்றும் கிட்னிக்கு ஆபத்தை நாமே தேடித் தருகிறோம்.
முதலில் நம் உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல்தான் வரும். அது வேறு இன்பெக்ஷன் ஏற்பட்டதால் வந்த காய்ச்சலாக இருக்கும்பட்சத்தில், சாதாரண காய்ச்சல் என்று நீங்களாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரிடம்தான் போய் செக்கப் அப் செய்து கொள்வது சாலச் சிறந்தது.
பொதுமக்களுக்கு வழங்கும் அறிவுரை?
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தால் நீங்கள் முதலில் நீர்ச்சத்து நிறைந்த ஒரு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். அதன்பிறகும் சரியாகவில்லை என்றால் மட்டுமே பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் 90 சதவிகித நோய்களை நம் உடலே சரி செய்துவிடும். அதை விடுத்து தேவையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றால் வேலை செய்யும். இல்லாத நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்து ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோம். என்னென்ன மருந்துகளால் யார், யார் எவ்வாறு பாதிக்கப்படுவோம் என்பது அவரவர்களின் உடல் நிலையைப் பொறுத்தது.
இன்னும் சில புத்திசாலி நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திக்கும்போது, இணை நோய்களுக்குச் சாப்பிடும் மாத்திரைகளைக் கையோடு கொண்டுவந்து காண்பித்து இப்போது நீங்கள் தரும் இந்த மாத்திரைகளோடு இதனையும் சேர்த்துச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். அதுதான் சரியான அணுகுமுறை. கர்ப்பிணிகள் கட்டாயம் டாக்டர்களிடம் கேட்ட பின்பே எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். தனிப்பட்ட அலர்ஜி எதுவும் இருந்தால் மருத்துவர்களிடம் முன்னேமே கூறி அதற்குத் தகுந்தாற்போல் மாற்று மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்திக் கொள்வது சாலச்சிறந்தது. அலர்ஜி என்பது எல்லா மருந்து மாத்திரைகளுக்கும் பொருந்தும்.
சிட்ரசின், அமெக்சி 250, அசித்ராமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எல்லாரும் இஷ்டத்திற்கு பயன்படுத்துகிறார்களே?
ஆன்டிபயாடிக் என்பதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கட்டாயம் பயன்படுத்தவே கூடாது. 90 சதவிகிதம் நோய்களை நம் உடலே சரிப்படுத்திக் கொள்ளும். அதையும் மீறி 10 சதவிகிதம் பேருக்குக் கட்டாயம் ஆன்டிபயாடிக் தேவை. அவ்வளவுதான். ஆன்டிபயாடிக் மருத்துவர் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல் என்னவென்றால் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படியிருக்கையில் மெடிக்கலில் நாமாகவே வாங்கிச் சாப்பிடும்போது எதனால் இன்பெக்ஷன் ஆனது என்பது தெரியாமல் அந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அது ரத்தத்தில் கலந்து நோயை உருவாக்கிய பாக்டீரியாவை விழிப்படையச் செய்துவிடும். இதனால் என்ன ஆகும் என்றால் நோயை உருவாக்கிய பாக்டீரியாவானது அதிக சக்தியுடன் உருமாறி அதிக பாதிப்பை உடலில் ஏற்படுத்திவிடும். எனவே டாக்டர்கள் அறிவுரை இல்லாமல் ஆன்டிபயாடிக் கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு பொது மருத்துவரும், இணைப் பேராசிரியருமான ராமலிங்கம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago